• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?

ByKalamegam Viswanathan

Apr 1, 2023

உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். சிறுவர் முதல் பெரியவர்கள்வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். ஆனால், தினம் தினம் ஏதோ ஒருவகையில் நம் அறிவை மேம்படுத்தியவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாளான `அறிவாளர்கள் தினம்’ பற்றி எத்தனை பேருக்குத் தெரியும். இந்த தினத்தன்று வெளிநாடுகளில், ஒருவருக்கொருவர் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வார்களாம். இதன் முக்கியமான நோக்கம், அனைவருக்கும் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதுதான். ஒருவரை அறிவாளி/ முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். முட்டாள்’ என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், தலைசிறந்த அறிவாளி’ எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள். சாக்ரடீஸ் முதல் பாரதியார் வரை, அவர்களின் குடும்பத்தாரிடமிருந்தே முட்டாள்’ பட்டம் பெற்ற பலரை, இன்று வரை நாம் கொண்டாடிவருகிறோம். இந்நிலையை என்னவென்று சொல்வது. இங்கு யார் அறிவாளி… யார் முட்டாள்?. ஏன், எதனால், எப்படி, போன்ற கேள்விகளில் பிறந்த எத்தனையோ பதில்களை நாம் தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

முதல்முதலில் நெருப்பைக் கண்டறிதலிருந்து, தனிநபருக்கு எவ்வளவு IQ (Intelligent Quotient) இருக்கிறது என்பதை யூகிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் மனிதன், அறிவை வளர்த்துகொண்டேதான் இருக்கிறான். அப்படி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ வியப்பூட்டும் அத்தியாவசிய பொருள்களால்தான் இன்று நாம் அதிநவீன வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஆஹா!’ என்று பலமுறை நம்மை பிரமிக்கவைத்த பல தொழில்நுட்ப உபகரணங்களைக் கண்டுபிடித்த மறக்க முடியாத விஞ்ஞானிகளில், தாமஸ் ஆல்வா எடிசன், கிரஹாம்பெல், அலெக்ஸ்சாண்டர் ஃபிளெம்மிங், ரைட் பிரதர்ஸ், நியூட்டன், ஜேம்ஸ் வாட், ஐன்ஸ்டீன், சார்லஸ் பாபேஜ், கலிலியோ, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்றோர் என்றைக்கும் ஸ்பெஷல் இடம்பிடித்தவர்கள். `அப்படினா ஏதாச்சும் கண்டுபிடிச்சாதான் அறிவாளியா?” என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இவர்கள் நம் கண்ணுக்குத் தெரிந்த அறிவாளிகள். அவ்வளவுதான். தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அதை அனைவரும் பயன்படுத்தும் முறையைச் சொல்லிக்கொடுக்கும் அடிப்படை கல்வி முதல் எது சரி, எது தவறு என்பதைப் பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் நம் பெற்றோர்கள் மற்றும் சமூகப் பகுத்தறிவாளர்கள் வரை அனைத்திலும் அனைவரிடமும் அறிவு’ சார்ந்த விஷயங்கள் உள்ளன. ஹிட்லர் முதல் பெரியார் வரை ஒவ்வொருவரின் எண்ணங்களும் கருத்துகளும் மாறுபடுமே தவிர, தனிப்பட்ட நபரின் அறிவாற்றலை அவ்வளவு எளிதில் எடை போட்டுவிட முடியாது.


சிறு வயதிலிருந்து, ஒழுங்கா படி. அப்போதான் அறிவு வளரும்’ என்ற வாசகத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். ஆனால், அதையும் மீறி எத்தனையோ உண்மை விஷயங்கள் இருக்கின்றன என்பதை வெளியுலகை தனியாய் நின்று போராடும்போதுதான் தெரிந்தது. இதேபோல் எத்தனையோ பேர் வெறும் பாடப்புத்தகத்தில் இருக்கும் வரிகளை மட்டுமே உண்மை என நம்பி விவாதிக்கின்றனர். நடைமுறை வாழ்க்கையைச் சொல்லித்தரும் மனிதர்களை’ விட சிறந்த புத்தகம் எதுவுமில்லை. மனிதர்களைப் படிப்பதும் அவ்வளவு எளிதல்ல. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் ஒரே அழகிய புத்தகம். கி.பி. 16ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1ம் தேதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. இப்போது ஜனவரி முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் இல்லையா? அதுபோல அப்போது ஏப்ரல் முதல் நாளை கொண்டாடினார்கள். அப்போதைய ஜூலியன் காலண்டரில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது. 1582ம் ஆண்டு பிப்ரவரி 29ம் தேதி புதிய காலண்டரை 13ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர் அறிமுகப்படுத்தினார். இதைத்தான் கிரிகோரியன் காலண்டர் என்று சொல்கிறோம். இந்தக் காலண்டரில் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பல நாட்டு மக்களும் ஏற்க மறுத்தார்கள். அப்படி ஏற்க மறுத்தவர்கள் ஏப்ரல் முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடினார்கள்.
ஜனவரி முதல் நாளை புத்தாண்டாக ஏற்று கொண்டவர்கள் இவர்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஏப்ரல் முதல் நாளில் புத்தாண்டு கொண்டாடுவோர் வீட்டுக்குப் பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். ஆனால், பரிசுப் பெட்டியைத் திறந்தால், அதில் ஒன்றும் இருக்காது. ‘நீ ஒரு முட்டாள்’ என்று துண்டுச்சீட்டுதான் இருக்கும். அதேபோலச் சட்டையின் பின்னால் ‘நான் ஒரு முட்டாள்’ என்ற துண்டுச்சீட்டை ஒட்டி கேலி பேசினார்கள். பிரான்ஸ் நாட்டில்தான் முதன் முதலில் இப்படி முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடியதாகச் சொல்கிறார்கள். பின்னர் படிப்படியாக எல்லா நாடுகளும் புதிய காலண்டரை ஏற்றுக் கொண்டன. தொடக்கத்தில் புதிய காலண்டரை அப்படி ஏற்றுக் கொண்ட நாடுகள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் கொண்டாடும் புத்தாண்டு தினத்தை, முட்டாள்கள் தினம் என அழைத்தார்கள். இப்படித்தான் முட்டாள்கள் தினம் அறிமுகமானது. இன்று உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றினாலும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள் தினமாகக் கொண்டாடுவது மட்டும் மறையவில்லை.


சிறுவயதில் உங்கள் பள்ளியில் உங்கள் நண்பர்களோடு முட்டாள்கள் தினத்தை கொண்டாடியது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும். ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொண்டு சந்தோசமாக வாழ்ந்த காலம் அது. சர்வதேசரீதியில் அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், தொழிளாலர்கள் தினம் என்று மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏனைய தினங்களுக்கு உரிமை கொண்டாடுவதைப் போல இத்தினத்தில் தமக்கும் பங்கிருப்பதாகச் சொல்லிக் கொள்ள எவரும் முன் வருவதில்லை. அதே நேரம் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அடுத்தவரை முட்டாளாக்க முனையும் முட்டாள்களான அறிவாளிகளின் தினம் என்றாலும் பிழையாகாது. விஷயங்களை அறிந்து கொள்பவன் அறிஞன் ஆகின்றான் என்பார்கள். அதேபோல் ஒரு முட்டாள் ‘தான் ஒரு முட்டாள்’ என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு ‘அறிஞனாக’ வாய்ப்புக் கிட்டுகிறதா என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகிறது. கற்றாரைக் கற்றாரே காமுறுவது போல் ஒரு முட்டாள் அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் என்றும் யாரோ ஒருவரும் கூறியுள்ளதாகவும் அறிகிறோம்.

மக்களை எப்படியெல்லாம் உலகம் முழுக்க அன்றைய தினம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதைப்பற்றிய பதிவு. ஸ்வீடன் நாட்டில் ஐம்பதுகளின் ஆரம்பத்தில் ஏப்ரல் ஒன்றாம் தேதி ரொம்பவும் சீரியஸாக தொலைகாட்சி முன்னர் தோன்றிய தொகுப்பாளர் எல்லா கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளையும் நைலான் உறையொன்றை பொருத்தி நீக்குவதன் மூலம் வண்ணத்தொலைக்காட்சியாக மாற்றிவிடலாம் என்று அறிவிக்க பற்றிக்கொண்டது ஸ்வீடன். அப்புறம் ஜாலியாக ஸாரி சொன்னார்கள். ஏப்ரல் 1, 1998 அன்று உலகப்புகழ் பெற்ற அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலையை வால்ட் டிஸ்னியின் நிறுவனத்திடம் விற்று விட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அக்கல்வி நிறுவன தளம் தெரிவித்தது. பல்கலை இடிக்கப்பட்டு வெவ்வேறு பகுதிகளுக்கு அதன் கிளைகள் ஏற்படுத்தப்படும் என்று அது அறிவித்த பொழுது அதிர்ந்து போனார்கள். அப்புறம் அக்கல்விக்கூட மாணவர்கள் தளத்தை ஹாக் செய்த விஷயம் புரிந்து தலையில் அடித்துக்கொண்டார்கள்.

ஏப்ரல் 1, 1976 அன்று பிபிசியின் ரேடியோ வானவியல் அறிவிப்பாளர் சனி மற்றும் ப்ளூட்டோவுக்கு இடையே ஏற்படும் இணைப்பால் புவியின் புவி ஈர்ப்பு விசை குறையும் என்றும் 9:47 a.m க்கும் சரியாக குதித்தால் மக்கள் மிதக்கலாம் என்று அறிவித்து அதை அப்படியே செய்து விழுந்தார்கள் பலபேர். அதே பிபிசி 1957ல் நூடுல்ஸ் போன்ற உணவான ஸ்பாகாட்டி ஸ்விட்சர்லாந்து நாட்டில் மரத்தில் விளைவதாக அறிவிக்க அந்த மரத்தின் விதைகள் எங்களுக்கு கிடைக்குமா என்று போன் கால்கள் ஓயாமல் வந்து சேர்ந்தன. 1980ல் பிக் பென் கடிகாரத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்போவதாக அடுத்த அறிவிப்பை வெளியிட்டார்கள். பெரிய கூத்து ஜப்பானிய பிபிசி அந்த கடிகாரத்தின் பாகங்களை முதலில் அழைக்கும் நாலு பேருக்கு விற்பதாக சொல்ல அட்லாண்டிக் கடலின் நடுவில் இருந்து ஒரு நேயர் அழைத்து அசடு வழிந்தார்.

பொலிடிகன் எனும் கோபன்ஹெகன் நகர செய்தித்தாள் டேனிஷ் அரசு நாய்கள் எல்லாவற்றுக்கும் வெள்ளை பெய்ன்ட் அடித்து இரவில் அவற்றின் மீது வாகனங்கள் மோதாமல் தடுக்க சட்டம் கொண்டு வந்திருப்பதை சொல்ல பல் நாய்கள் பாவம் வெள்ளை பூச்சுக்கு மாறின. ஐரீஷ் டைம்ஸ் 1995ல் டிஸ்னி நிறுவனம் லெனினின் பாதுகாக்கப்பட்ட உடலை வாங்கி தன்னுடைய பொழுது போக்கு மையத்தில் வைக்க இருப்பதாகவும் அதன் பின்புறத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் குரல் கசியும் என்று வதந்தியை கசிய விட்டது. The China Youth Daily பத்திரிக்கை சீனாவில் முனைவர் ஆய்வில் ஈடுபடுவர்கள் ஒரு பிள்ளை மட்டுமே என்கிற சட்டத்தில் இருந்து விலக்கு பெற்றுக்கொள்ளலாம் என்று கிளப்பிவிட்டு அதை சில செய்தி நிறுவனங்கள் உலகம் ழுக்க கொண்டு போய் சேர்த்தன. முதல் உலகப்போரின் April 1, 1915 அன்று ஜெர்மனி வீரர்கள் நிறைந்த ஒரு இடத்துக்குள் பிரெஞ்சு விமானம் குண்டு ஒன்றை வீசிவிட்டு சென்றது. வெகுநேரம் வெடிக்காமலே இருக்கவே, அருகில் போய் அதை பார்த்தால் கால்பந்து, அதில் “ஏப்ரல் ஃபூல் !” என்று எழுதி வேறு ஒட்டியிருந்தார்கள். பர்கர் கிங் எனும் அமெரிக்க நிறுவனம் இடது கைப்பழக்கம் உள்ள மூன்றரை கோடி அமெரிக்கர்கள் உன்ன இடக்கை வோப்பர் எனும் உணவுப்பண்டத்தை கொண்டு வந்திருப்பதாக சொல்ல வலக்கை பழக்கம் உள்ளவர்கள் சண்டைக்கு வந்துவிடவே அதுவே புரூடா என்று புரிய வைத்தார்கள்.

கூகுள் ஏப்ரல் தினத்தில் குறிப்பிட்ட தயாரிப்பை வெளியிடுவதாக சொல்லி ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஏப்ரல் 1, 2004ல் மின்னஞ்சல் சேவையை துவங்குவதாக சொல்ல எல்லாரும் ஏமாற்றப்போகிறார்கள் என்று அலர்ட் ஆகியிருந்தார்கள். ஜிமெயிலை மெய்யாலுமே உருவாக்கி ஷாக் தந்தது கூகுள்,இப்படியும் ஏமாற்றலாம் பாஸ். லண்டன் டைம்ஸ் இதழ் 1992 இல் பெல்ஜியத்தின் ஒரு பாதியை நெதர்லாந்தும் இன்னொரு பாதியை பிரான்சும் பிரித்துக்கொள்ளும் என்று அறிவிக்க அதை பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி உண்மை என்று நம்பி டிவி ஷோவில் வாதிக்க கிளம்பி விட்டார். அப்புறம் அஸ்கு,புஸ்கு சொன்னார்கள் அவருக்கு. இந்தியாவின் ப்ளிப்கார்ட் நிறுவனம் பணத்தை டெலிவரி செய்யும் சேவையை ஆரம்பிப்பதாக கிளப்பி விட்டார்கள். லேஸ் சிப்ஸ் நிறுவனம் செய்தித்தாளில் வெளிச்சத்தால் இயங்கும் டிவி பார்க்கலாம் என்றொரு விளம்பரம் தர அதை உண்மையென்று செய்தித்தாளை ஆட்டிப்பார்த்து ஏமாந்து போனார்கள் எண்ணற்ற வாசகர்கள்.

நமது இயக்குனர் பாக்கியராஜ் சிறந்த அறிவாளி. அவர் இந்தியாவின் சிறந்த திரைக்கதாசிரியர் என்பதுடன் சிறந்த குட்டிக்கதை சொல்லி எனும் புகழும் அவருக்கு உண்டு. அவர் நடத்தும் பாக்யா இதழின் கேள்வி-பதில் பகுதியில் அவர் பதிலளிக்கையில் ஒவ்வொரு கேள்விக்கும் சிறு சிறு கதைகள் சொல்லி விடையளிப்பது சுவாரசியமாக இருப்பதோடு அறிவுக்கும் விருந்தளிக்கும். ஒரு முறை முட்டாள்கள் யார்? அறிவாளி யார்? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, அறிவாளி என்றெல்லாம் யாரும் கிடையாது. உலகில் மூன்று வகை முட்டாள்கள் தான் இருக்கிறார்கள். முதல்வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என அவர்களுக்கு தெரியாது, ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் தெரியும். இவர்கள் முட்டாள்கள். இரண்டாம் வகை முட்டாள்களுக்கு தாங்கள் முட்டாள்கள் என்று அவர்களுக்கும் தெரியும், அடுத்தவர்களுக்கும் தெரியும் இவர்கள் பொதுவானவர்கள். இறுதிவகையானவர்கள் முட்டாள்கள் என தங்களுக்கு தாங்களே தெரிந்த வைத்திருப்பர். ஆனால் மற்றவர்களுக்கு தெரியாமல் வைத்திருப்பர். இவர்கள் அறிவாளிகள் என்றழைக்கப்படுகின்றனர் என்று பதிலளித்திருந்தார். ஏப்ரல் ஒன்று மட்டுமல்ல வருடம் தோறும் வாழ்நாள் தோறும் நம்மை முட்டாளாக உணரச் செய்யும் ஆற்றல் ஆளும் வர்க்கத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது வரலாறு தாண்டிய உண்மை. ‘முட்டாள்கள்’ தினத்தில் நாம் முட்டாள்கள் ஆனாலும் சரி, பிறரை முட்டாள்கள் ஆக்கினாலும் சரி, மனம் புண்படாமல் பண்பாக விளையாடுவோம்.
அறிவாளர்கள் தினம் வாழ்த்துகள்.
Source By: Wikipedia, Vikatan and Hindutamil
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.