இந்திய இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகருமானவர் கே.ஜே.யேசுதாஸ். தன் 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார்.
யேசுதாஸ் திரைப்படப் பாடகராக 1960களில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் துவங்கினார். தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் அறிமுகமானார். முதலில் வெளியான படமாக கொஞ்சும் குமரி அமைந்தது.
1970களில் இந்தித் திரைப்படங்களில் பாடத்துவங்கினார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் எட்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான மாநில விருது கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களின் அரசுகள் கொடுத்த விருதுகளை நாற்பத்து மூன்று முறை பெற்றவர். இந்திய அரசால் இவருக்கு 1975 இல் பத்மஸ்ரீ , 2002 இல் பத்ம பூஷண், மற்றும் 2017 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் வழங்கப்பட்டது. இந்திய இசை வரலாற்றில் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவர் யேசுதாஸ்.இந்த சாதனை கலைஞன் கே.ஜே.யேசுதாஸ் பிறந்த தினம் இன்று..!