• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இன்று சர்வதேச செவிலியர் தினம்-பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்

ByKalamegam Viswanathan

May 12, 2023

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியர் இன்னொரு தாய் – சர்வதேச செவிலியர் தினம், பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் இன்று (மே 12, 1820).

ஒரு மருத்துவமனையின் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள் என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். 1965ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது. பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதத் தொண்டை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூர முடிவு செய்யப்பட்டது. அன்றைய தினத்தை நாளை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் ஆண்டு தோறும் மே 12-ம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் சம்பிரதாயப்பூர்வமாக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

நவீன செவிலியர் முறையை உருவாக்கியவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல். நர்ஸ் தொழிலின் புனிதத்துவத்தை உணர்த்திய இவர் போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டு சேவை செய்தார். நர்ஸ் பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் ஆரம்பித்தார். ‘கை விளக்கேந்திய காரிகை’ என்று அனைவராலும் போற்றப்பட்ட இவர் ஓர் எழுத்தாளர் ஆவார். பிரிட்டனில் செல்வச்செழிப்பு மிக்க உயர் குடிக் குடும்பத்தை சேர்ந்த நைட்டிங்கேல், இத்தாலியின் ஃபுளோரன்ஸ் நகரில் பிறந்தார். இவர் பிறந்த இடத்தின் பெயரைத் தழுவி இவருக்குப் பெயரிட்டார்கள். கிறிஸ்தவரான இவர் தனக்கு இறைவனால் விதிக்கப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை உணர்ந்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி நோயாளிகளைப் பராமரிக்கும் கல்வி நெறியை மேற்கொண்டு, மூன்றாண்டுகளில் நோயாளிகளைப் பராமரிப்பதில் நிபுணத்துவம் பெற்றார்.

அந்தக் காலத்தில் செவிலியர் சேவை ஒரு கவுரவமான பணியாகக் கருதப்படவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களே இந்தப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்தக் காலத்தில் செவிலியர், உயர் செல்வக் குடும்பங்களில் சமையல்காரியாகவும் வேலை செய்யவேண்டி இருந்தது. பிளாரன்ஸ் வறியவர்கள் மீதும், இயலாதவர் மீதும் அக்கறை கொண்டிருந்தார். 1844, டிசம்பரில் லண்டனிலிருந்த ஆதரவற்றோர் விடுதியன்றில் வறியவர் ஒருவர் இறந்தது பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து பிளாரன்ஸ், ஆதரவற்றோர் விடுதிகளில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக முன்னணியில் நின்று வாதாடினார். 1854ல் கிரிமியாவைக் கைப்பற்றிய ரஷ்யாவுக்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகள் போர் தொடுத்தன. கிரிமியன் போரில் பாதிக்கப்பட்டுள்ள படையினருக்கு உதவும் பொருட்டு 38 செவிலியருடன் ராணுவ மருத்துவமனைக்கு சென்றார். வசதி குறைவுகளுக்கு மத்தியில் ராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை வழங்கினார். அன்பினாலும் சிகிச்சைகளாலும் பிளாரன்ஸ் ராணுவப் படையினரைக் குணப்படுத்தினார்.

இரவு வேளைகளில் கையில் விளக்கு ஒன்றை ஏந்திய வண்ணம் நோயாளிகளிடம் சென்று நலம் விசாரித்து மருந்துகளையும் வழங்கி வந்தார். தங்களை காக்க ‘விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்த தேவதை’ என ராணுவ வீரர்கள் பிளாரன்ஸைக் கவுரவித்தனர். மருத்துவ வசதிகளுக்கும், சுகாதார நுட்பங்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த மருத்துவமனைகள் பற்றிய குறிப்புகள் மருத்துவத் துறையில் செவிலியர் பணிக்கான நூலாக இருக்கின்றன. போரிலிருந்து நாடு திரும்பிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் சாதனைப் பெண்மணியாக வரவேற்கப்பட்டார். விக்டோரியா அரசிக்கு அடுத்தபடியாக மிகவும் அறியப்பட்ட பெண்ணாக ‘பிபிசி’யினால் இனங்காட்டப்பட்டார். நாடு திரும்பிய நைட்டிங்கேலை இங்கிலாந்து மக்கள் கவுரவப்படுத்த விரும்பினர். அவருக்குப் பொன்னும், பொருளும் வழங்கினர். தனக்கு கிடைத்த பணத்தின் மூலம் ஒரு நர்சிங் பள்ளியை நைட்டிங்கேல் தொடங்கினார். இது தற்போது லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஒரு பகுதியாக, ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேல் செவிலியர் பயிற்சிக் கூடம்’ என்கிற பெயரில் இயங்கி வருகிறது.

மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும். உலகின் மொத்த சுகாதரப் பணியாளர்களில் 50% செவிலியரும் மருத்துவப் பணிப்பெண்களும் ஆவர். உலக அளவில் சுகாதாரப் பணியாளர்கள் குறைவு படுகின்றனர். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவில் செவிலியர் மற்றும் மருத்துவப் பணிப்பெண் குறைபாடு உள்ளது. நிலைத்த வளர்ச்சி இலக்கு 3ஐ அடைவதற்கு 2030க்குள் உலக அளவில் 90 லட்சம் செவிலியர்களும் மருத்துவப் பணிப்பெண்களும் தேவைப்படுகின்றனர். சுகாதாரச் சேவையை முன்னெடுத்துச் செல்வதிலும், நோய்த் தடுப்பிலும், ஆரம்ப சுகாதாரம் மற்றும் சமுதாய பராமரிப்பிலும், அவசர நிலை அமைப்பிலும் செவிலியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்பில் வெற்றி பெறுவதற்கு அவர்களே முக்கியமானவர்கள்.

சமுதாயத்திலும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகளிலும் செவிலியர்கள் ஆற்றும் பங்கு பலதிறப்பட்டன. தனிநபர் பராமரிப்பு, சிகிச்சை மேலாண்மை, குடும்பங்களோடும் சமுதாயத்தோடும் இணைந்து பணியாற்றுதல் ஆகியவை இதில் அடங்கும். பொது சுகாதாரத்திலும் நோய்களையும் தொற்றுகளையும் தடுப்பதிலும் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். சுகாதாரத்தை மேம்படுத்துதல், நோய்களைத் தடுத்தல், நோயாளிகள், ஊனமுற்றோர், மரணப்படுக்கையில் இருப்போர் ஆகியோரைப் பராமரித்தல் இதில் அடங்கும். அனைவருக்குமான சுகாதார பாதுகாப்பு செவிலியரின் துணையோடு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று. நாட்டின் பல்வேறு மக்கள் பிரிவுகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் சுகாதாரத் தேவைகளை சந்திக்க செவிலியர் ஆற்றும் சேவைகள் இதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த தினத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேலை நினைவுகூரும் அதே நேரத்தில், உலகெங்கிலும் சேவை புரியும் செவிலியர்களின் மகத்தான பணிகளை நாம் அனைவரும் பாராட்டுவது மிக அவசியம்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.