
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க.வின் நிலைப்பாடு குறித்து இன்று கமலாலயத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று இருந்தார். அங்கு ஜேபி நட்டா மற்றும் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த நிலையில் இன்று காலை சரியாக 8:30 மணி அளவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பானது நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார். இதில் அகில பாரத பொதுச் செயலாளர் சிடி ரவி, மாநில துணைத்தலைவர் கருநாகராஜன் ஆகியோர் இருக்கின்றனர். இன்று ஒரு மணிக்குள் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று அண்ணாமலை தெரிவித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் பாஜக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு தரப்பில் எந்த தரப்பிற்கு ஆதரவு தரப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில் காலையில் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இருவரையும் அண்ணாமலை அடுத்தடுத்து சந்தித்து இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகின்றதா என்ற கேள்விக்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார். பாஜக நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்று அறிவிக்கபடும் என்பதை கமலாலயத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறுவோம் என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
