• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

Byவிஷா

Mar 21, 2024

உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் ‘ஆரூரா தியாகேசா’ கோஷத்துடன் கோலகலமாக நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவாரூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஆழித்தேர் தான். ‘திருவாரூர் தேரழகு’ என்று ஊர் பெருமையைத் தாங்கி நிற்கும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர்த் திருவிழா இப்போது நடக்கிறது
பிரமாண்டங்களுக்குப் பெயர் போனது திருவாரூர் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் தியாகராஜர் திருக்கோயில். சைவ சமய பீடத்தின் மிகப் பெரிய தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் பூமிக்கு உரிய தலமாகவும், சர்வ தோஷங்களையும் நீக்கும் பரிகாரத் தலமாகவும் இத்தலம் விளங்குகிறது. இங்கு பிறந்தாலே முக்தி என்ற சிறப்புப் பெற்ற தலம்.
இக்கோயிலில் உள்ள ஆழித்தேர் என்றழைக்கப்படக்கூடிய பிரமாண்டத் தேர்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர். இந்த ஆழித்தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த 96 அடியில் 36 அடியானது மரத்தினால் ஆன தேர்ப் பீடமாகும். மற்ற 60 அடி மூங்கில் போன்றவற்றால் இத்தேர்பீடத்தின் மீது எழுப்பப்படும் கோபுரமாகும். இந்த கோபுரத்தின் மீது சுமார் ஐந்து டன் எடையுள்ள வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்படும். பிரமிக்க வைக்கும் பிரமாண்டத் தேரினை வடம் பிடித்து இழுக்க சுமார் ஒரு கி. மீ நீளம் தூரம் கொண்ட 15 டன் எடையிலான வடக்கயிறு பயன்படுத்தப்படும்.
“ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே” என திருநாவுக்கரசரும், “தேராரும் நெடுவீதி திருவாரூர்” என சேக்கிழாரும் இத்தேரைப் பற்றி திருமுறைப் பதிகங்களில் பாடியுள்ளனர். தமிழகத்தில் உள்ள தேர்களில் திருமுறையில் பாடப்பெற்ற ஒரே தேர் என்ற பெருமையை பெற்றது ஆழித்தேர்.

அனைத்து ஊர் மக்களும் வந்து இந்தத் தேரை இழுத்துக் கொண்டாடுகின்றர்.

‘தேர் முனை திரும்பும் அழகைக் காணக் கண் கோடி போதாது’ என்பது திருவாரூர் மக்கள் வாக்கு. அத்தனை பேரழகாய் இருக்கும் இந்த தேர் திரும்பும் அழகு.

இந்த ஆழித்தேர் இழுக்க இழுக்க, ‘ஆரூரா தியாகேசா’ என்ற கோஷமும் வானை எட்டும் அளவுக் கேட்கிறது. அந்த உற்சாகத்தில் திளைத்தே மக்கள் தேர் இழுத்து மகிழ்கின்றனர். குந்தியாலம், கொடியாலம், பாம்புயாலம் உள்பட மொத்த 92 அலங்காரங்கள் செய்யப்பட்ட இவற்றின் எடை சுமார் 50 டன். இத்தேரில் இதுபோல் இன்னும் பல சிறப்புகள் உள்ள தேர் பவனி நடக்கிறது.