• Tue. May 30th, 2023

சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சுவாமிமலை முருகன் கோயிலில் திருப்படி பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


முருகனின் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இத்தலத்தில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தைக்கே உபதேசம் செய்வித்ததால் குரு உபதேச தலம் என்ற புகழுடையது. இக்கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜன.,1) அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு தனுர்மாத பூஜை, விசுவரூப தரிசனம் நடைபெற்றது.

தொடர்ந்து திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே புனித நீராடி கோயிலுக்கு வருகை தந்து நீண்டவரிசையில் நின்று வழிபட்டனர். பின்னர் சிறப்பு அபிஷேக, ஆராதனைக்குப்பிறகு மூலவர் சுவாமிநாத சுவாமி தங்ககசவம், வைரவேல் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மகாதீபாரதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மலைக்கோயிலில் உள்ள சன்னதி முன்பு ஆண்களும், பெண்களும் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு முருகன் கோவிலில் உள்ள 60 தமிழ் வருட தேவதைகளின் பெயரில் அமைந்துள்ள 60 திருப்படிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அறுபது குத்துவிளக்குகள் வைத்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *