மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் 13ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மும்பையில் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2008 நவம்பர் 26-ம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள். நவம்பர் 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் நடத்திய கோர தாக்குதலை யாரும் மறந்துவிட முடியாது. பயங்கரவாதிகளால் மும்பை ரத்த சகதியாக மாறிய தினம் இன்று.
அந்த நாளில்தான், இந்தியாவின் வர்த்தக தலைநகரம் என்ற சிறப்புக்குரிய மும்பையை அழித்து, நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும் என்று சதி செய்து பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர்.
அவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து, சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ் ஓட்டல், நரிமன்ஹவுஸ், லியோபோல்டு கபே, ஒபேராய் டிரைடெண்ட் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் அதிபயங்கர தாக்குதல் நடத்தினர். மும்பை போர்க்களமாகி போனது.
பயங்கரவாதிகளுக்கும், இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே 2 நாட்கள் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் பலரை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்ததால், அவர்களை உயிருடன் மீட்க நமது வீரர்கள் போராட வேண்டியிருந்தது. பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக சண்டையிட்ட பயங்கரவாத தடுப்பு போலீஸ் படைத்தலைவர் ஹேமந்த் கர்காரே, கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விஜய் சலாஸ்கர், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் வீர மரணம் அடைந்தனர்.
இந்தியாவை மட்டுமின்றி, உலக நாடுகளை எல்லாம் உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலில், இந்தியர்கள் மட்டுமல்லாது அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் 9 பேர் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாயினர்.
அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் சிக்கினான். அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில்நிலையத்தில் நடத்திய தாக்குதலை இன்று நினைத்து பார்த்தாலும் நெஞ்சை பதறவைக்கும் அளவுக்கு கொடூரமானது. அவர்கள் ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அப்பாவி பயணிகள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என கண்ணில் பட்டவர்களை காக்கா, குருவிகளை போல ஈவு இரக்கமின்றி கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளினர். 15 நிமிடங்களில் அவர்கள் 58 பேரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் 104 பேர் படுகாயமடைந்தனர்.
அவன்மீது முறைப்படி வழக்கு தொடரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் 2012-ம் ஆண்டு புனே எரவாடா சிறையில் தூக்கில் போடப்பட்டான்.
மும்பையில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நவீன ஆயுதங்கள் மும்பை போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. போலீசார் மட்டுமின்றி முப்படைகளும் மும்பையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் தற்போது மும்பை பாதுகாப்பான நகரமாக மாறி உள்ளது. எனினும் பயங்கரவாதிகளின் கழுகு பார்வை மும்பையின் மீது நீடிக்கத்தான் செய்கிறது.
மும்பை தாக்குதல் நடந்து 13-வது ஆண்டு நிறைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தாக்குதலால் ஏற்பட்ட துயர வடுக்கள், மக்கள் மனங்களில் இருந்து இன்னும் அழியவில்லை. மும்பை மட்டும் இன்றி உலகில் எங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறக் கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.