



உத்தரப் பிரதேசத்தில் 24 தலித்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பின்பு 3 குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்து மைன்புரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், தெஹுலி கிராமத்திற்குள் கடந்த 1981 நவம்பர் 18-ம் தேதி மாலை 4.30 மணியளவில் காக்கி உடையணிந்த 17 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஊருக்குள் புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த தலித் மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், 6 மாதக் குழந்தை மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்பட 24 தலித் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சந்தோஷ் சிங், ராதே என்ற ராதே ஷியாம் ஆகியோர் தலைமையில் வந்த கொள்ளைக்கும்பல் இந்த அட்டூழியத்தை நடத்தியது. இந்த கொள்ளைக் கும்பலுக்கு எதிராக நான்கு தலித் கிராமவாசிகள் நீதிமன்றத்தில் சாட்சியளித்தனர். இதனால் இந்த படுகொலைகள் நடந்தன.

இந்தியாவை உலுக்கிய இந்த படுகொலைகள் தொடர்பாக லெய்க்சிங் என்பவர் 1981 நவம்பர் 19-ந்தேதி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சந்தோஷ் மற்றும் ராதே உள்பட 17 கொள்ளையர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு மைன்புரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு நடந்த 44 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார். ராம் சேவக், கப்டன் சிங் மற்றும் ராம்பால் ஆகியோர் வழக்கை சந்தித்து வந்தனர். இந்நிலையில்தான் இந்த மூவரும் குற்றவாளிகள் என கடந்த 11-ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்கள் மூவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. அத்துடன் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. தலித் மக்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த கொலைகள் நடைபெற்றதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தெஹுலி கிராமத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி
உத்தரப்பிரதேச மாநிலத்தை அதிர வைத்த இப்படுகொலைகள் நடந்த போது, இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி உடனடியாக தெஹுலி கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வாஜ்பாய், மக்களிடையே ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தெஹுலியில் இருந்து பிரோசாபாத்தில் உள்ள சதுபூர் வரை நடைபயணம் மேற்கொண்டார்.

