• Sun. Feb 1st, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

இடத்தகராறில் 2 பேர் வெட்டிக்கொலை மூவர் கைது..,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் இட தகராறில் மாமனார் மற்றும் மருமகன் வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவ வீரர், அவரது தாய் தந்தை என 3 பேரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி மந்தை அம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் சுந்தர்(55), இவரது மனைவி சுதா(45), இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். சுந்தர் வீட்டு அருகே வசித்து வருபவர் ராஜேந்திரன் அவரது மனைவி விஜயா, இவர்களது மகன் பார்த்திபன். பார்த்திபன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

சுந்தர் மற்றும் ராஜேந்திரன் குடும்பத்தினர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்தாருக்கும் கடந்த சில மாதங்களாக வீட்டின் அருகே உள்ள நடைபாதை இடம் தொடர்பாக சண்டை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சுதாவின் தந்தை முத்துமாயன் சுதா வீட்டிற்கு வந்திருந்த போது ராஜேந்திரன் குடும்பத்தாருக்கும் சுந்தர் குடும்பத்தாருக்கும் இடையே இந்த இட பிரச்சினை தொடர்பாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது ராஜேந்திரன் அவரது மகன் பார்த்திபன் மனைவி விஜயா ஆகியோர் அங்கிருந்த கட்டை மற்றும் அரிவாள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சுந்தர், முத்துமாயன், சுதா உள்ளிட்ட மூவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முத்துமாயன் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். சுந்தர் மற்றும் சுதா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எதிர் தரப்பான ராஜேந்திரன், பார்த்திபன், விஜயா ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் அறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த முத்து மாயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த சுந்தர் மற்றும் சுதா ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதில் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் சுந்தர் உயிரிழந்தார். தொடர்ந்து சுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த தகராறில் காயமடைந்த ராஜேந்திரன், பார்த்திபன், விஜயா ஆகிய மூவரையும் காவல்துறையினர் தங்களது கைது வளையத்திற்குள் கொண்டு வந்து தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

இடம் பிரச்சனை சம்பந்தமாக நடைபெற்ற கொலையா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சண்டையில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.