• Mon. Feb 26th, 2024

டெல்டா மாவட்டங்களில் மிரட்டும் மழை

டெல்டா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. சீர்காழியில் அதிக அளவாக 22 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வெளுத்து வாங்கிய கனமழையால் ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்த நிலையில் நேற்று மதியம் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சிரமம் அடைந்தனர். சீர்காழியில் 22 செ.மீ. மழை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. நாகை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை கொட்டி தீர்த்தது. கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி கோம்பை அருகே மூங்கில்காடு கிராமத்தில் பழங்குடியினத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். கனமழை காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தை கயிறு கட்டி மலைக்கிராம மக்கள் கடந்து செல்கின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார். பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கதடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் நேற்று அதிகாலை ராஜாஜி நகர் பகுதியில் திடீரென நகராட்சி தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மேலும் அதன் இடிபாடுகள் ஒரு வீட்டின் முன்பகுதியை மூடியது. இதனால் வீட்டின் கதவை கூட திறக்க முடியவில்லை. வீட்டில் இருந்த 4 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும், இடிபாடுகள் வீட்டின் முன்புறம் விழுந்து கிடந்ததால், அவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி கொண்டனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
இதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்தது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், விழுப்புரத்தில் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. விழுப்புரம் அருகே உள்ள கொங்கராயனூர்-அருளவாடி இடையே உள்ள தென்பெண்ணை ஆற்று தரைபாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பாலத்தை கடக்க முயன்ற டிராக்டரை வெள்ளம் அடித்து சென்றது. இதில் காயத்துடன் ஆற்றில் தத்தளித்த ராமு என்பவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். மேலும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட டிராக்டரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு 5 வீடுகள் இடிந்துள்ளன.
புதுச்சேரியிலும் நேற்று காலை முதல் நாள் முழுவதும் சாரல் ஆகவும் பலமாகவும் இடைவிடாது மழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மேலும் 2 நாட்கள் (வெள்ளி, சனிக்கிழமைகள்) விடுமுறை விடப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *