• Sun. Nov 15th, 2026

கம்பம் தொகுதியில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டும்!

கம்பம் தொகுதியில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோர் அந்தத் தொழில்களைக் கைவிட்டு மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டும். தொடர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிக்கு உட்பட்ட நாட்டுக்கல், மின்வாரியத் தெரு, தண்ணீர்த் தொட்டித் தெரு, காமாட்சி கவுண்டர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. நேற்று காலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளைச் சீரமைக்கவும், சாக்கடைக் கால்வாய்களைத் தூர்வாரி முறையாகப் பராமரிக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர்த் தொட்டிகளை ஆய்வு செய்து, கழிவுநீர் குடிநீரில் கலக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, நகராட்சிப் பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள பழைய பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்களை முறையாக அகற்றி, நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதையடுத்து, மின்வாரியத் தெருவில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை அருகே உள்ள பெட்டிக்கடையில், உரிய அனுமதியின்றி பார் வசதி ஏற்படுத்தி மது விற்பனை நடைபெறுவதை ஆய்வின்போது கண்டறிந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கம்பம் தொகுதியில் இனி சட்டவிரோதச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, ரேஷன் அரிசி கடத்தல், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் அரசு விதிமுறைகளை மீறி மது விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்களுக்கு இனி கம்பம் தொகுதியில் இடமில்லை.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களது சட்டவிரோதத் தொழில்களைக் கைவிட்டு, மாற்றுத் தொழிலுக்குச் செல்ல வேண்டும். தொடர்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் எவ்விதப் பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஆய்வின்போது தமிழக வெற்றிக் கழக தேனி தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளர் செல்வேந்திரன், செயற்குழு உறுப்பினர் அய்யர் மற்றும் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.