தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. ரீ என்ட்ரிக்குப் பிறகு முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் சிறப்பான படங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். உடல் எடையைக் குறைத்ததிலிருந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் முதலில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, மஹா, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் கைவசம் உள்ளன. கடந்த சில நாட்களாகவே சிம்புவிற்கும், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சிலருக்கும் பண விவகாரத்தில் வெடித்த பிரச்சனை தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. சிம்பு படத்திற்கு பெப்சி தொழிலாளர்கள் போகக்கூடாது என தடைவிதிக்கும் அளவிற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கறார் காட்டி வருகிறது.
இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளால் நொந்து போன சிம்பு ரசிகர்களை குஷியாக்கும் விதமாக ஒரு குட்நியூஸ் கிடைத்துள்ளது. அதாவது தமன் இசையில் ஈஸ்வரன் படத்தில் வெளியான அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்த செய்தி. குறிப்பாக மாங்கல்யம் என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அந்த பாடல் யூடியூப்பில் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்புவின் பாடல் முதல்முறையாக இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.