• Mon. Oct 2nd, 2023

இந்த நாள்

Byகாயத்ரி

Nov 8, 2021

வீரமாமுனிவர் நவம்பர் 8, 1680 இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.


தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி” என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.


திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர். மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார்.

பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *