• Mon. May 6th, 2024

‘தியானலிங்கம் மன அமைதியை தருகிறது’ ஈஷாவிற்கு வருகை தந்த திருவாவடுதுறை ஆதீனம்

ByKalamegam Viswanathan

Jun 20, 2023

திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு நேற்று இரவு (ஜூன் 18) வருகை தந்தார்.
அவருக்கு மடாதிபதிகளை வரவேற்கும் சம்பிரதாய முறைப்படி நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். பின்னர், மகா சந்நிதானம் பார்வையிடுவதற்காக ஆதியோகியில் சிறப்பு திவ்ய தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று காலை (ஜூன் 19) கைலாய வாத்தியம் முழங்க ஆலயங்களுக்கு மகா சந்நிதானம் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்கள். அவர் தியானலிங்கம், லிங்கபைரவி, நாகா சந்நிதி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர், நாட்டு மாடுகளை பராமரிக்கும் ஈஷாவின் கோசாலையை பார்வையிட்டார். மேலும், ஈஷா சம்ஸ்கிருதி குருகுலத்திற்கு சென்று மாணவர்களின் களரி பயட்டை நேரில் கண்டு களித்ததோடு அம்மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மகா சந்நிதானம் அவர்கள் ஈஷாவிற்கு வருகை தந்தது குறித்த தனது அனுபவத்தை கூறும் போது, “சத்குருவின் ஈஷா அறக்கட்டளைக்கு வந்து பல்வேறு இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள தியானலிங்கம் மன அமைதியை தருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து யோகா கற்று பயன் அடைகிறார்கள். இந்த யோக பயிற்சிகள் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும். மன அமைதியையும் அளிக்கும். தேவார பாட சாலை மற்றும் கோசாலையை சென்று பார்வையிட்டோம். கோசாலையை மிக அருமையாக பராமரித்து வருகிறார்கள். இது மிகப்பெரிய புண்ணியம்.

அதேபோல், பாரம்பரியமான சிறு தானிய உணவுகளை கொண்டு இங்கு அன்னதானம் அளிக்கிறார்கள். இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுப்பது, மரங்கள் நடும் பணிகளை மேற்கொள்வது போன்ற ஈஷாவின் செயல்கள் மிகவும் பாராட்டுக்குரியவை. ஈஷா அறக்கட்டளையை செம்மையாக நடத்தி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்” என்றார்.
ஈஷாவிற்கு வருகை தந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் தியான அன்பர்களுக்கு மகா சந்நிதானம் அவர்கள் அருளாசி வழங்கினார். மேலும், ஈஷாவின் பிரம்மச்சாரிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு சால்வை அணிவித்து சிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *