• Fri. Apr 19th, 2024

விருதுநகரில் திருவிழாவின் போது தாகம் தீர்க்கும் தன்னார்வலர்கள்..!

Byவிஷா

Apr 6, 2023

விருதுநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழாவின் போது கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு, தன்னார்வலர்களும் மற்றும் பொதுமக்களும் இணைந்து ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைத்து பக்தர்களின் தாகத்தைத் தீர்த்து மனிதநேயத்தைப் பறைசாற்றி வருகின்றனர்.
விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவின் போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் அதிகளவில் மக்கள் விருதுநகருக்கு வருகை தருவார்கள். என்றும் இல்லாத அளவுக்கு அந்த நாட்களில் மட்டும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் கூடி இருக்கும் காட்சியை பார்க்க முடியும்.
சாதாரண நாட்களிலேயே விருதுநகரில் வெயில் அதிகமாக இருக்கும் அப்படி இருக்கையில் வெயில் காலத்தில் சொல்லவே வேண்டாம். ஆனால் அந்த வெயிலிலும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருக்கும். வெயிலை பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வரும் பக்தர்களை குளிர்விப்பதற்காகவே வழிநெடுக மோர் பந்தல், சர்பத் பந்தல் போன்ற குளிர்பான பந்தல்கள் போட்டு அவர்களின் தாகம் தீர்த்து வருகின்றனர் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள்.
இது இன்று நேற்று மட்டும் அல்ல நீண்ட காலமாக பங்குனி பொங்கல் நிகழ்வை ஒட்டியே நடந்து வருகிறது. பங்குனி பொங்கல் என்றாலே திருவிழாவுக்கு அடுத்தபடியாக இந்த குளிர்பான பந்தல்கள் தான் அனைவரது நினைவுக்கு வரும். இந்தாண்டு பங்குனி பொங்கல் திருவிழாவிலும் ஏராளமான குளிர்பான பந்தல்கள் போடப்பட்டு இருந்தன. அதில் தன்னார்வலர்கள் பலர் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு தேடி தேடி சென்று குளிர்பானம் வழங்கினர். சிலர் இதை பொதுமக்களுக்கு செய்யும் சேவையாகவும் இன்னும் சிலர் இதை கடவுளுக்கே செய்யும் சேவையாகவும் நினைத்து செய்து வருகின்றனர். அதனால் தான் இத்தனை ஆண்டுகள் இந்த சேவை பங்குனி பொங்கல் திருவிழாவில் தொடர்ந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *