• Fri. Jun 21st, 2024

திருசிற்றம்பலம்- விமர்சனம்!

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் தனுஷ், இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், ரஞ்சனி, மு.ராமசாமி, முனீஸ்காந்த், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தம புத்திரன்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நான்காவது முறையாக நடித்துள்ள படம் இது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவாகியிருக்கும் படமும் இதுவாகும். மேலும், ‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் தனுஷ் படம் என்ற ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’

தமிழ்த் திரைப்படங்களில் அள்ள அள்ளக் குறையாதது காதல் படங்கள்தான். அடுத்தடுத்த தலைமுறையினரின் புதுவிதமான காதல் அணுகுமுறைகளைஅந்தந்த காலகட்ட நேரங்களில் காதல் படங்கள் வெற்றிகரமாக ஓடுவதுண்டு. அப்படியொரு திடீர் வரவுதான் திருசிற்றம்பலம்

தனது தாத்தாவான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற பாரதிராஜாவுடனும், போலீஸ் இன்ஸ்பெக்டரான நீலகண்டன் என்ற பிரகாஷ்ராஜூடனும் சென்னையில் வசித்து வருகிறார் நாயகனான ‘திருச்சிற்றம்பலம்’ என்ற ‘பழம்’ என்ற தனுஷ்.

இவருக்கும், தந்தை பிரகாஷ்ராஜூக்கும் இடையில் பத்தாண்டுகாலமாக பேச்சுவார்த்தையில்லை. இவருடைய அம்மாவும், தங்கையும் ஒரு கார் விபத்தில் மரணமடைந்ததில் இருந்து அந்த விபத்துக்கு பிரகாஷ்ராஜூவும் ஒரு காரணமாக இருந்ததால் அப்பா மீது கோபம் கொண்ட தனுஷ் அவருடன் பேசாமலேயே ஒரே வீட்டில் இருக்கிறார்.

அதோடு கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்த படிப்பைக்கூட விட்டுவிட்டு ஒரு நிறுவனத்தில் உணவு சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகிறார். தனுஷூம் அவரது தாத்தாவும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தும் அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள்.

இவருடைய வீட்டுக்குக் கீழ் வீட்டில் வசித்து வருகிறார் நித்யா மேனன். ஐடி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இந்த இரண்டு குடும்பங்களும் பல வருடங்களாக நெருங்கிப் பழகி வருகிறார்கள். இதனால் நித்யா தனுஷை ‘வாடா, போடா’ என்றும், தனுஷ் நித்யாவை ‘வாடி, போடி’ என்றும் உரிமையோடு அழைத்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் கல்லூரியில் தனுஷூடன் படித்த ராஷி கண்ணா திடீரென்று தனுஷை சந்திக்கிறார். இருவரும் பழகுகிறார்கள். இதைக் கேள்விப்படும் நித்யா மேனன் ராஷியிடம் தனுஷை காதலிப்பதாகச் சொல்லச் சொல்கிறார். ஆனால் ராஷி, தனுஷின் காதலை மறுத்துவிட்டுப் போகிறார்.

இந்த நேரத்தில் திடீரென்று பிரகாஷ்ராஜுக்கு பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாகிறார். இவர்களது வீட்டுக்கு ஒரு பெண் வந்தால்தான் இவர்களையெல்லாம் கவனித்துக் கொள்ள முடியும் என்ற நிலைமை ஏற்படுகிறது. தாத்தா பாரதிராஜா, பேரன் தனுஷை கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறார்.

கிராமத்தில் ஒரு திருமணத்திற்காக வந்த இடத்தில் பிரியா பவானி ஷங்கரை பார்க்கும் தனுஷ் உடனேயே அவருடன் மையல் கொள்கிறார். “இவர் எனக்குப் பொருத்தமாக இருப்பார்” என்று நித்யாவிடம் தனுஷ் சொல்ல, நித்யாவே பிரியாவை தனுஷிடம் அழைத்து வந்து பேச வைக்கிறார். ஆனால் பிரியாவுக்கு தனுஷ் மீது பிரியம் இல்லை என்பது தெரிய வர ஏமாற்றமாகிறார் தனுஷ்.

இந்த நேரத்தில்தான் “நித்யாவை ஏன் நீ கல்யாணம் செய்யக் கூடாது” என்று தாத்தா அட்வைஸ் கொடுக்க.. தனுஷ் குழப்பமாகிறார். இந்த நேரத்தில் நித்யாவும் வேலைக்காக வெளிநாடு கிளம்ப இருவரின் நிலைமையும் என்னவாகிறது என்பதுதான் கிளைமாக்ஸ் கதை..!

தனுஷ் இது மாதிரியான கதாபாத்திரங்களை அசால்ட்டாக செய்வார் என்பதால் இந்த படத்திலும் அப்படியேதான் செய்திருக்கிறார்.மனம் கஷ்டப்படும்போதெல்லாம் தனது அறையில் இளையராஜா புகைப்படத்தின் முன்பாக அமர்ந்து சோக கீதங்களை கேட்டு கண்ணீர் விடும் தவிப்பாளராய் தனுஷ் நம்மை மிகவும் கவர்கிறார்
தனது அப்பாவிடம் சரிக்கு சரி மல்லுக்கட்டி பேசும் காட்சியிலும், அவரைத் தூக்குவதற்கு முன்பு அவர் படும் தவிப்பை காட்டியவிதத்திலும் தனுஷின் நடிப்பு ஒரு ஸ்பெஷல்தான்.

தான் ஒரு இன்னசென்ட் என்பதை பல காட்சிகளிலும் நிரூபித்துவிட்டு கடைசியில் பக்கத்திலேயே இருக்கும் நித்யாவின் காதலை தான் இன்னமும் புரிந்து கொள்ளாமலேயே இருப்பதை உணரும் காட்சியில் நம்முடைய ஹார்மோன்ஸையும் தூண்டிவிட்டிருக்கிறார் தனுஷ். ‘தாய்க் கிழவி’ பாடல் காட்சியில் அவர் ஆடும் நடனமும் இன்னமும் தான் ஒரு ‘மன்மத ராசா’ என்பதை நிரூபிப்பதுபோல இருக்கிறது.

பிரகாஷ்ராஜ் எப்போதும்போல இந்தக் கதாபாத்திரத்தை தன்னைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். மகன் மீதான கோபம்.. அப்பா மீதான பரிதாபம்.. தன்னைத்தானே கழிவிரக்கத்தில் தள்ளிக் கொண்டு அவர் இருப்பதும், மகனின் புரிந்து கொள்ளாமையை நினைத்து அவர் புலம்புவதும், நோய்வாய்ப்பட்ட பின்பு தனது நிலைமையை மகனுக்கு எடுத்துச் சொல்லும் காட்சியிலும் ஐயோ பாவம்.. “பேசித்தான் தொலையேண்டா” என்று நம்மையே கத்த வைத்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

படத்தின் ஆணி வேர் நித்யா மேனன்தான். அட்டகாசம் செய்திருக்கிறார். அவருடைய உடல் வாகுக்கும், முகத்திற்கும் பொருத்தமான உடைகளை அணிந்து அதில் ஒரு துளிகூட கிளாமர் வராமல் பார்த்துக் கொண்டு தனது நடிப்புத் திறனை மட்டுமே காட்டியிருக்கிறார் நித்யா.

இவருக்கும் தனுஷூக்கும் இடையில் நடக்கும் வாய்ச் சண்டைதான் படத்தின் நகைச்சுவைக் காட்சிகள். போதாக்குறைக்கு பாரதிராஜாவும் சேர்ந்து கொண்டு அவ்வப்போது அடிக்கும் ஒன் லைன் துணுக்குகள் படத்தில் ஆங்காங்கே சிரிப்பலையை எழுப்புகிறது.

பாரதிராஜா தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மகனையும் விட்டுக் கொடுக்காமல், பேரனையும் புறந்தள்ளாமல் இருவரையும் சமாளித்துக் கொண்டு தானும் வாழ்ந்து காட்டும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் சிம்ப்ளி சூப்பர்.

“உனக்கு அப்பா.. எனக்கு மகன்டா” என்று வேதனையுடன் சொல்லும் அந்த ஒரு காட்சியிலேயே ஒட்டு மொத்த ஆடியன்ஸைும் உச்சுக் கொட்ட வைக்கிறார் பாரதிராஜா. தனது பழைய காதல் கதைகளை பேரனிடம் சொல்லும்போது அதற்கு தனுஷ் அளிக்கும் பன்ச்சில் தியேட்டரே அதிர்கிறது.

ராஷி கண்ணா மாடர்ன் டைப் காதலியாகவும், பிரியா பவானி ஷங்கர் கிராமத்துப் பெண்ணாகவும் நடித்துள்ளனர். முன்னவரோ பிரெண்ட்ஷிப்பாக பழக நினைக்கிறார். பிரியாவோ “தெரிந்தவராக மட்டுமே இருந்தால் போதும்” என்கிறார். ஆனால், இவர்கள் இருவருடனும் தனுஷூக்கு பாடல் காட்சிகளை வைத்து சமப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் திறமை தெரிகிறது. பட்ஜெட்டுக்குத் தகுந்த ஒளிப்பதிவை அழகாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.தனுஷுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருப்பதால் அனிருத் ஸ்பெஷலாக 4 பாடல்களை போட்டுத் தாளித்திருக்கிறார்.

‘தாய்க் கிழவி’ பட்டி, தொட்டியெங்கும் ஹிட்டாகிவிட.. மற்றவைகள் படத்தின் கனத்தை நம் மனதில் ஏற்றியிருக்கின்றன. அதிலும் இடைவேளைக்கு முன்பு ஒரு பாடலும், பின்பு 3 பாடல்களையும் வைத்திருந்தாலும் படத்தில் அது எந்தப் பாதிப்பையும் தரவில்லை என்பது உண்மை.

கலை இயக்குநர், உடை வடிவமைப்பாளர் இருவரையும் மனதாரப் பாராட்ட வேண்டும். அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான கண் கவர் கலர்களை வைத்து பிரேமை அழகுபடுத்தியிருக்கிறார்கள்.

தன் மேல் பெரும் அக்கறையெடுத்து ஆலோசனை சொல்லி வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒரு பெண் மீது ஏன் தனக்கு இதுவரையிலும் காதல் வரவில்லை என்பதை தனுஷை நினைத்துப் பார்க்க வைத்திருப்பதுதான் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக உள்ளது.

அவனாக காதலைச் சொல்லுவான் என்று எதிர்பார்த்து, ஏமாந்து கனடா கிளம்பும் நித்யாவின் கடைசி நிமிட பரிதவிப்பு காட்சிகளும், விமானத்தில் கதறியழுது தனது சோகத்தைத் தீர்த்துக் கொள்ளும் அந்தக் காட்சியிலும் நித்யா மேனனே இந்தப் படத்தைக் காப்பாற்றியிருக்கிறார் என்று சொல்ல வைக்கிறது.

நட்புக்கும், காதலுக்குமான எல்லைக் கோடுகளைப் பற்றி இதுவரையிலும் எத்தனையோ படங்கள் இதற்கு முன்பாக வந்திருந்தாலும் இந்தப் படம் அதே கதையில் போரடிக்காமல், கடைசிவரையிலும் ஒரு பரபரப்பாகவே சென்றிருக்கிறது. அந்த அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர்.

எழுத்து, இயக்கம் – மித்ரன் ஆர்.ஜவஹர், தயாரிப்பு சன் பிக்சர்ஸ், இசை – அனிருத், ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை இயக்கம் – ஜாக்கி, சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், ஜானி, உடைகள் வடிவமைப்பு – காவ்யா, பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், புகைப்படங்கள் – அமீர், விளம்பர வடிவமைப்பு – சிவம் சி.கபிலன், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.ரமேஷ் குச்சிராயர், சுரேஷ் மணியன், இணை தயாரிப்பு – ஸ்ரேயாஸ் சீனிவாசன்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *