• Fri. May 27th, 2022

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை – சேகர்பாபு உறுதி

தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்றும், அரசு அனைத்து மதங்களையும் சமமாக நடத்துகிறது என்றும், இது தான் எனது நிலைப்பாடு மற்றும் முதலமைச்சரின் நிலைப்பாடு என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அரியலூர் வடுகர்பாளையத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, பொங்கல் விடுமுறைக்காக பள்ளி விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த நிலையில், உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தனியார் பள்ளியில் படித்து வந்த அந்த மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகத்தினர் அவரை மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும் இதனால் பள்ளி நிர்வாகம் அவரை திட்டி அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் இதனால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் மாணவி மதமாற்றம் செய்ய முயன்றதால் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் அறிக்கை மூலமாக கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தி தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளிக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என தஞ்சை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா, மாணவி மரண வாக்குமூலம் கொடுக்கும்போது மதமாற்றம் குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும், தேவையற்ற வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் மாணவியின் அடையாளத்தை கூறினாலோ, அவர் பேசியதாக வெளியாகியுள்ள வீடியோவை பரப்பினாலோ கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.


இதனிடையே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்கு ஈடாக தங்கள் குழந்தை மட்டுமல்ல, தாங்களும் கூட மதமாற்றம் செய்ய கூறப்பட்டதாக அவரது பெற்றோரும் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். அதனை மறுத்ததைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சிறுமி கூறியுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக பள்ளியின் வார்டன் சகாயமேரியை (62) போலீசார் கைது செய்துள்ளனர்.
இருப்பினும், மதமாற்றத் தடைச் சட்டம் மற்றும் பள்ளிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையால், ஜனவரி 19 அன்று இறந்த தங்கள் மகளின் உடலைப் பெற பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்.


இந்த நிலையில் கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுத்ததால் பள்ளி நிர்வாகத்தின் துஷ்பிரயோகம் காரணமாக 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து கருத்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமில்லை என்று என்று கூறினார். சென்னையில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில்களை திமுக அரசு திட்டமிட்டு மூடுவதாக கூறுவது அற்ப அரசியல், அனைத்து மதமும் சமம், அவரவர் விரும்பும் வழிபாட்டுக்கு எந்த வகையிலும் இடையூறு இருக்கக் கூடாது, சுதந்திரமாக வழிபாடுகளில் ஈடுபட அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினார்.

மேலும், தமிழகத்தில் எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது, தமிழக முதல்வரின் நிலைப்பாடும் அதுதான், தமிழகத்தில் கட்டாய மதமாற்றத்திற்கு இடமே இல்லை என அமைச்சர் சேகர்பாபு உறுதிபட கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.