• Thu. Apr 25th, 2024

இந்தியாவின் மிக உயரமான நபர் சமாஜ்வாடியில் இணைந்தார்

இந்தியாவின் மிக உயரமான நபராகக் கருதப்படும் தர்மேந்திரா பிரதாப் சிங் நேற்றைய தினம் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்.

46 வயதான இவர், 8 அடி 1 அங்குலம் உயரத்துடன் கின்னஸ் ரெகார்டு புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தர்மேந்திரா பிரதாப் சிங் தங்கள் கட்சியில் இணைந்திருப்பதை வரவேற்றுள்ள சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் படேல், “தர்மேந்திராவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். சட்டசபைத் தேர்தல் நேரத்தில் இவரின் அரசியல் பிரவேசம் எங்கள் கட்சியின் பலத்தை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

தர்மேந்திரா பிரதாப் சிங் சமாஜ்வாடியில் இணைந்தது குறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்திரி, “சமாஜ்வாடியின் கொள்கைகள்மீதும், அகிலேஷ் யாதவின் தலைமைமீதும் நம்பிக்கை வைத்து, தர்மேந்திரா பிரதாப் சிங் எங்களோடு இணைந்திருக்கிறார். அவரின் வருகை எங்கள் கட்சிக்கு வலுசேர்க்கும்” என்று கூறினார்.

உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியைச் சேர்ந்த இவர், அசுர உயரத்தின் காரணமாக வேலை கிடைக்காமல் தினறியாதாகவும், அதனால் திருமணம் கூடச் செய்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், “என்னுடைய உயரத்தால் நான் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறேன். இருப்பினும், நான் வெளியே செல்லும்போதெல்லாம் மக்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மேலும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால், மக்கள் மத்தியில் நானும் ஒரு பிரபலம் தான்” என்கிறார்.

உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. தேர்தல் களத்தில் பல்வேறு பிரபலங்கள் முதல்முறையாகப் போட்டியிடவுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் உ.பி-யின் மெய்ன்புரி மாவட்டத்திலுள்ள கார்ஹல் தொகுதியில் போட்டியிடவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *