தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் திடீர் திடீரென சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருவதுடன், முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.
மேலும் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடும் நபர்களை எச்சரிப்பது மற்றும் அவர்களுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நேற்று மாவட்டத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களைப் பார்வையிடச் சென்ற மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிபட்டி பகுதியில் சென்றபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனங்களை நிறுத்தி, முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்ததுடன் அபராதமும் விதித்தார்.
மேலும் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்துகளை நிறுத்தி சோதனையிட்ட மாவட்ட ஆட்சியர் முகக் கவசம் அணியாமல் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகளை பார்த்து உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அடுத்தவர்களின் உயிரோடு விளையாடுகிறார்களே என்று கடுமையாக எச்சரித்தார்.
இந்த வீடியோ தற்போது தேனி மாவட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.