தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு தேனி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்து சேர்ந்தது .இதனையடுத்து வைகை அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 559 கன அடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் ஆற்றின் வழியாக ஆர்ப்பரித்து செல்கிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் மீண்டும் உபரிநீர் கூடுதலாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆண்டிபட்டியில் 60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.