• Wed. Apr 17th, 2024

கேரளாவில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக இருசக்கர வாகன பேரணியை நிறுத்தக் கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும், கேரளாவில் இன்று நடைபெற்று வரும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான இருசக்கர வாகன பேரணியை உடனடியாக நிறுத்தக் கோரியும் கேரளா வழக்கறிஞர் ரசூல் ஜோய் கைது செய்ய வலியுறுத்தியும் விவசாய சங்கத்தின் சார்பாக லோயர் கேம்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென் தமிழகத்தின் வாழ்வாதாரமான விளங்கக்கூடிய முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என தொடர்ச்சியாக தென் தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் போன்றவற்றை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாய சங்கத் தலைவர் எஸ் ஆர் தேவர் தலைமையில் விவசாய சங்கத்தினர் லோயர் கேம்ப் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

முன்னதாக அவர்கள் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையான குமுளி பகுதியை நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயன்ற விவசாய சங்கத்தினர் தமிழக காவல்துறையினர் அடிவாரப் பகுதியான லோயர்கேம்ப் பகுதியிலேயே தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அதனைத் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும், கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக விஷமக் கருத்துக்களை பரப்பி வரும் ரசூல் ஜோய்யை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், இன்று கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி இன்று நடைபெற்றுவரும் இருசக்கர வாகன பேரணியை தடுத்து நிறுத்தவேண்டும் எனவும், முல்லைப் பெரியாறு அணையின் மீது பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் கேரளா பிரிகேட் என்ற அமைப்பினை தடை செய்ய வேண்டும், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் வட்டாட்சியர் அர்ஜுனன் மற்றும் காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் உத்தமபாளையம் ஸ்ரேயா குப்தா ஆகியோர் விவசாய சங்கத்தினர் இடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முல்லைப் பெரியாறு அணை விஷயம் குறித்து விவசாய சங்கத்தினர் கருத்துக்களை உடனடியாக தமிழக அரசுக்கு தெரியப்படுத்த படும் என்று அவர்கள் கூறியதை அடுத்து விவசாய சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தின் காரணமாக தமிழக கேரள எல்லையான குமுளி மார்க்கமாக செல்லக்கூடிய வாகனங்கள் அரை மணி நேரத்திற்கு மேலாக நிறுத்தம் செய்யப்பட்டது. சபரிமலைக்கு செல்லக்கூடிய ஐயப்ப பக்தர்கள் வாகனம் கேரளாவிற்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பேருந்துகள் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும் விவசாய சங்கத்தினர் எல்லைப் பகுதிக்குள் நுழையாமல் இருப்பதற்காக நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் பொதுமக்கள் 5 மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பெரிய ஆளுமை இணைந்து மாவட்ட விவசாய சங்கத்தின் தலைவர் எஸ் ஆர் தேவர் கூறுகையில், தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் உடனடியாக தலையிட்டு கேரளாவின் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விஷமப் பிரச்சாரங்களை தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்த வேண்டும். அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் 5 மாவட்ட நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *