சங்க வேளையாக பேச சென்ற எங்க நிர்வாகிகளை போ…வா….என ஒருமையில் பேசிய, தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரி, தேனி மாவட்ட அரசு நிதி உதவி பெறும் நிர்வாகிகள் சங்கத்தினர், இன்று (பிப்.26) காலையில் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சுப்பிரமணியனிடம் புகார் மனு அளித்தனர்.
தேனி மாவட்ட அரசு நிதி உதவி பெறும் நிர்வாகிகள் சங்க தலைவர் லட்சுமிவாசன், செயலாளர் துரை வேணுகோபால், பொருளாளர் சரவணக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் சண்முகநாதன், ஆண்டவர், செல்வம், சுந்தரேசன் மற்றும் மூர்த்திராஜன் ஆகியோர் சார்பில், தேனி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., சுப்பிரமணியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இன்று காலை 11 மணியளவில் சங்க பொதுக்குழு தீர்மானத்தின்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்திக்க சென்றோம். அவர் எங்கள் கோரிக்கைகளை கேட்காமல் எங்கள் சங்க செயலாளரை ஒருமையில் பேசியும், பள்ளி செயல்பாட்டில் குறையும் கூறினார். நாங்கள் சங்க வேளையாக வந்துள்ளோம். எங்களது கோரிக்கைகளை பரிசீலியுங்கள் என்று கூறினோம். அவர் வாக்கு வாதமாகவும், விரண்டவாதமாகவும் பேசி சத்தமிட்டார். அவர் மீது துறை ரீதியான தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம், என தெரிவிக்கப்பட்டிருந்தது.
லட்சுமிவாசனிடம் கேட்டபோது, எங்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் நிர்வாக மானியம் வழங்கப்படுகிறது. அதை, அரசு விதிப்படி 2 சதவீதமாக உயர்த்தி தர கோரிக்கை விடுத்தோம். இது சம்பந்தமாக பேச இன்று காலையில் சங்க நிர்வாகிகளுடன், மாவட்ட முதன்மை கல்வி அலுவரை சந்தித்தோம். அப்போது உடன் வந்த செயலாளரை ஒருமையில் பேசியதை கண்டித்து, டி.ஆர்.ஓ., விடம் புகார் மனு கொடுத்தோம்’ என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில்,” புகார் எப்படியும் கொடுக்கலாம். நான் யாரையும் ஒருமையில் பேசவில்லை. பள்ளி நிதி தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை” என்றார்.