சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழபட்டமங்கலம் ஊராட்சியிக்கு உட்பட்ட வெளியாரி கிராமம் ஒத்தவளவு பகுதியில் அமைந்துள்ள செங்கபள்ளம் (எ) கருப்பையா கோவில் ஊரணி இருந்து வருகிறது.
இக்கோவிலுக்கு பூஜை மற்றும் ஏனைய சுபநிகழ்ச்சிகளுக்கு கோவில் ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த அருகே உள்ள மணிமுத்தாறில் இருந்து மழைத் தண்ணீர் வருவது வாடிக்கையாககும். ஆனால் தற்சமயம் 50 வருடத்திற்கு மேலாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கோவிலுக்கு தண்ணீர் வரும் நீர்வரத்து கால்வாய் மண்மேவியதோடு, சீமை கருவேல மரங்கள் அடர்ந்த காடு போல் காட்சி அளித்து வந்தது.
கடந்த ஒரு மாத காலமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிக அளவு வடகிழக்குப் பருவமழை பெய்து வந்த நிலையில் அருகே உள்ள மணிமுத்தாற்றில் வெள்ளம் போவதைப் பார்த்த இளைஞர்கள் கோவில் ஊரணிக்கு எப்படியாவது தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற விடாமுயற்சியால் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்பாட்டில் ஜேசிபி எந்திரம் உதவியோடு ஊரணிக்கு வரும் வரத்துக்கால்வாய் பகுதிகளில் இருந்த அடைப்புகளை சரி செய்து தற்சமயம் தண்ணீர் வர வழிவகை செய்துள்ளனர்.
அரை நூற்றாண்டாக தண்ணீர் இல்லாமல் இருந்த ஊரணிக்கு இளைஞர்களின் பெரும் முயற்சியால் தற்சமயம் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் சாதனை புரிந்து செயல்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் இளைஞர்களுக்கு கிராம பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.