சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி என்ற மூதாட்டி தனது பேத்தி நிகிதாவுடன் காரில் வந்துள்ளார்.

அப்போது கோயில் தற்காலிக ஊழியர் அஜித்திடம் கார் சாவியை கொடுத்து பார்க்கிங் செய்யுமாறு கூறியுள்ளார். பின்னர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு காரில் வந்து பார்த்தபோது காரில் இருந்த 10 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதனை அடுத்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த காவல்துறையினர் தற்காலிக ஊழியர் அஜித்திடம் விசாரணை மேற்கொண்டனர். அஜித் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில் போலீசார் விசாரணைக்காக வேனில் அஜீத் உட்பட 5 பேரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அஜித் உயிரிழந்ததாக தகவல் பரவியதை அடுத்து மடப்புரம் மற்றும் திருபுவனத்தைச் சேர்ந்த அஜித்தின் உறவினர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தில் குவிந்தனர். சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ்ராவத் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உறவினர்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அஜித் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததால் பதற்றம் நிலவுகிறது. இதனால் திருப்புவனம் காவல் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.