• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பரபரப்பை ஏற்படுத்தும் ‘யார் அந்த சார்’ போஸ்டர்

Byவிஷா

Dec 30, 2024

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள ‘யார் அந்த சார்’ போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, ‘மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தபோது, ஞானசேகரன் செல்போனுக்கு அழைப்பு வந்ததாகவும், அவர் ஒருவரிடம் சார் சார் என்று பேசியதாகவும்’ அந்த மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். அந்த சார் யார் என்பதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் காவல்துறை உயரதிகாரி, பாலியல் வன்கொடுமை செய்தது ஞானசேகரன் மட்டும்தான் என்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் ஆளுங்கட்சியினர் சம்மந்தப்பட்டுள்ளனர்.
ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவராக இருப்பதாக தகவல் வருகிறது. இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டவுடன், அவர் பெயர் இடம்பெற்ற பேனர்கள், நோட்டீஸ்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களை தப்பிக்க வைக்க இந்த காவல்துறை செயல்படுகிறதோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக தலைவர்கள் பலருடன் இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுகவினர் ‘யார் அந்த சார்?’ என போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சென்னையில் பசுமைவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், கரூர், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர்.
சமூக வலைதளங்களிலும் அந்த போஸ்டரை பரப்பி வருகின்றனர். சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழித்து அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு போஸ்டர் ஒட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க போலீஸார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவினர் இந்த போஸ்டர் ஒட்டியதால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.