காளையார்கோவில் அருகே பழமையான சமுதாயக் கிணற்றின் சுவர் இடிந்து கிணற்று நீரினுள் சென்றுவிட்டது. ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புளியடிதம்பம் ஊராட்சி அம்மாபட்டினத்தில் 64 ஆண்டுகள் பழமையான சமுதாயக் குடிநீர் கிணறு உள்ளது. இக்கிணற்றில் தரைக்கு மேல் 5 அடி உயரத்துக்கு சிமென்ட் சுவர் கட்டப்பட்டிருந்தது. இக்கிணற்று நீரை அம்மாபட்டினம், வேலடிதம்பம், வேம்பனி உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீரென சுவர் இடிந்து கிணற்றுக்குள் சரிந்தது. அப்போது அருகிலிருந்த மக்கள், அந்த இடத்தைவிட்டு அலறியத்து ஓடினர்.
மேலும் அக்கிணறு அருகே யாரும் செல்ல முடியாதபடி முள்வேலி அமைத்தனர். சாலையோரத்தில் இருக்கும் இந்த கிணற்றில் அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகனங்களும் விழுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக கிணற்றை சுற்றி சுவர் எழுப்ப உள்ளாட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.