

மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் வரும் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் 15ம் தேதிக்குள் நிரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, “அரசு மருத்துவமனைகளில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம்.அந்த வகையில் ஏற்கனவே 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமனங்கள் செய்யப்பட்ட போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடந்த நேர்காணலில் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு 20 சிறப்பு மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டார்கள்.பணியமர்த்தப்பட்ட 7,448 நபர்களில் 50 சதவீதம் பேர் கொரோனா காலத்தில் பணியாற்றிய நபர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் பணியிடங்கள் நிரப்பப்படும் பொழுது கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றியவர்களை நிரந்தரப்படுத்த முடியாது.
தமிழகத்தில், மருத்துவத் துறையில் 1021 மருத்துவர்கள் உட்பட மொத்தம் உள்ள 4308 காலியிடங்களின் பட்டியல் மருத்துவ தேர்வாணயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.சென்ற நிதிநிலை அறிக்கையிலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அந்த பணியிடங்களை நிரப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.கடந்த வாரம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு கட்டிடங்களை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது 237 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் அல்லது நவம்பர் 15-ம் தேதிக்குள் இந்த 4308 பணியிடங்களும் எந்த மருத்துவமனைகளில் காலியிடங்கள் இருக்கிறதோ அதற்கு தகுந்தாற் போல் நிரப்பப்படும்” என்று கூறினார்.
