• Thu. Apr 25th, 2024

டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் #getoutravi … நீட் விலக்கு மசோதா விவகாரம்

Byகாயத்ரி

Feb 4, 2022

நாடு முழுவதும் மருத்துவக் கல்வியில் சேருவதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த நீட் தேர்வு, மத்திய அரசின் கல்வித் திட்டத்தின்படி கொண்டு வரப்பட்டதால், மாநிலக் கல்வியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருந்தது.

மாநிலத்தில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட நீட் தேர்வில் தோல்வியடையும் நிலை உருவானது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன.இந்தநிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி புதிய சட்ட மசோதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும், தமிழக கவர்னர் இந்த சட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 4 மாதமாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், திடீரென தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு குறித்த சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்ய சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். ஆளுநரின் இந்த முடிவு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கவர்னரின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமூக அமைப்புகள், மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் # GetOutRavi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் #StateRights #BANNEET,#GoBack_TNGovernor போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *