ஜெய்பீம் திரைப்படம் குறித்து சூர்யாவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதற்கு சூர்யாவும் பதில் தெரிவித்திருந்தார்.
இந்த படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்துக்கு பின்பக்கம் அக்னி குண்டம் படத்துடன் கூடிய வன்னியர் சங்க காலண்டர் தொங்க விட்டு காட்சிப்படுத்தியதாகவும், குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை வைத்துள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டது.
எனினும், ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 2டி எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குநர் ஞானவேல், படம் வெளியான ஓடிடி தளமான அமேசான் ஆகியோருக்கு வன்னியர் சங்கத்தின் தலைவர் அருள் மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும் 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து, நடிகர் சூர்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில், நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் ‘WeStandWithSuriya’என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.