
உலகில் அழியாத ஒரு மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்ட ஒன்று தான் டைட்டானிக் கப்பல். பிரமாண்ட அளவில் செலவு செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒற்றை கப்பல் டைட்டானிக்.இந்த கப்பலை பற்றி படமாக எடுக்கப்பட்டு அதில் ஒரு காதல் காவியமும் சேர்க்கப்பட்டு அக்கதைக்கு மெருகூட்டியது.இந்த கப்பலின் பின் கதையை தான் நாம் இன்று காண போகிறோம்.
ஆங்கில நாவலாசிரியர் மார்கன் ராபர்ட்சன் எழுதிய கற்பனை நாவல் 14 வருடங்களுக்கு பின் உண்மையாக நடந்தது தான் டைட்டானிக் கப்பல் விபத்து. உலக வரலாற்றில் என்றுமே அழியாத வண்ணம் மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி சென்றது தான் ‘ஆர்.எம்.எஸ் டைட்டானிக்’ கப்பல்.வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவாக்கப்பட்ட இந்த கப்பல் தான் உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். 882 அடி நீளம், 175 அடி உயரம், 92 அடி அகலம் கொண்ட அந்த கப்பலின் எடை 46,328 டன்கள். கப்பலின் ஹாரன் சத்தம் 11 மைல் தொலைவு வரை கேட்கக் கூடியது.
அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.1909 ஆம் ஆண்டு 3000 தொழிலாளர்களின் உழைப்பில் மார்ச் 31 ஆம் தேதி முழுக் கட்டுமானமும் முடிந்து விட்ட நிலையில் பயணம் துவங்குவதற்கேற்ப கப்பலில் பெரும்பாலான இடங்கள் நிரம்ப வில்லை. அந்த நேரம் பார்த்து இங்கிலாந்து கப்பல் ஊழியர்கள சிலர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட, மற்ற கப்பல்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த பலர் ‘ஆர்.எம்.எஸ் டைட்டானிக்’ கப்பலுக்கு மாற்றப் பட்டனர்.டைட்டானிக் கப்பலின் கேப்டன் ஸ்மித் அந்தப் பயணத்துடன் ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார். ஆர்.எம்.எஸ் டைட்டானிக் தன் முதல் பயணத்தை புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு ஆரம்பித்தது. குறைந்த பட்சம் 30 டாலர்களும், அதிகபட்சம் 4,350 டாலர்களும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட கப்பலில் கடைசியில் 2227 பயணிகள் பயணம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14ம் தேதியன்று வெப்பநிலை குறைந்த உறைநிலையில் இருந்ததால், கடல் அமைதியாக காணப்பட்டது.வழியில் அதிகமான பனிப்பாறையில் இருப்பதாக டைட்டானிக் கப்பலுக்கு, அமெரிக்க கப்பல் ஒன்று 1:45 மணிக்கு செய்தி அனுப்பியது. ஆனால் அந்த செய்தி கப்பலை சென்றடையவில்லை.இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது.அதிலிருந்து 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15, 1912 இல் கப்பல் முழுவதும் மூழ்கியது. இந்த விபத்தில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் 28 °F (-2 °C) குளிர் தாங்காமல் உயிரிழந்தனர்.
சரி இதுல என்னடா புது விஷயம் அப்படின்னு கேட்டா…இந்த
டைட்டினிக் கப்பலை பற்றி முன்னதாகவே மார்கன் ராபர்ட்சன் என்பவர் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் டைட்டானிக்கின் கடைசி நிமிடத்தை பற்றியும் இருப்பது கூற்று…
மார்கன் ராபர்ட்சன் எழுதிய புதினத்தின் மர்மம் :
1898 ம் ஆண்டு மார்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) எழுதிய Futility or The Wreck of The Titan என்கிற கற்பனை நாவலில் நாயகன் பெயர் ஜான் ரோலண்டு ( John Rownald). அமெரிக்க கடற்படை அதிகாரியாக வேலை செய்துவந்த ஜான், மதுக்கு அடிமையானதால் அங்கிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு டைட்டான் கப்பலில் டெக்கண்டாக வேலை செய்யும் கட்டாயத்திற்க்கு தள்ளப்படுகிறான்.
ஏப்ரல் மாதம் ஒருநாள் இரவு கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்தில் சிக்குகிறது. அப்போது ஒரு இளம்பெண்ணை காப்பாற்றும் பொருட்டு கடலில் குதிக்கிறான். ஒரு லைஃப் படகு அவர்களை கண்டறிந்து மீட்டு செல்கிறது. அப்போது தான் அவனக்கு தெரிகிறது, அந்த இளம்பெண் தன்னுடைய முன்னாள் காதலியின் மகள் என்பது.இதற்கிடையில் அந்த இளம்பெண்ணின் தாய், தன்னுடைய மகளை ஜான் கடத்திவிட்டதாக போலீசாரிடம் புகார் கொடுக்கிறார். அதன்பேரில் போலீசாரும் அவனை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இருந்தாலும் நீதிபதி ஜானின் தரப்பில் நியாயம் உள்ளதை உணர்ந்து ஜானை விடுதலை செய்கிறார். மேலும், தன் மகளின் உயிரைக் காப்பாற்றியவரின் மேலேயே புகார் அளித்ததால் அப்பெண்ணின் தாயாரை எச்சரிக்கிறார்.
அங்கிருந்து விடுதலையான ஜான், வீடில்லாமல் மீனவனாக வேலை செய்து வருகிறான். அதன்பிறகு மீண்டும் சிவில் தேர்வில் தேர்ச்சி பெற்று மீண்டும் அரசாங்க வேலைக்கு செல்கிறான்.பெண் மற்றும் விஷ்கியால் அவனுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக அதன் கருத்து கூறப்படும்.
இரண்டையும் ஒத்துப்பார்க்கையில்,நமக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும்..
• இரண்டு கப்பல்களின் பெயர்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும்.
• இரண்டுமே அதிகமான மனிதர்களால் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்ட மிதவை கப்பல்
• டைட்டன் 800 அடி (240 மீ) நீளம் மற்றும் 45,000 டன் எடை கொண்டது Vs நிஜ டைட்டானிக் 882 அடி (269 மீ) நீளம், 46,000 டன் எடை கொண்டது.
• இரு கப்பல்களுமே “UNSINKABLE” அதாவது மூழ்கடிக்க முடியாதவை என்றே விளம்பரம் செய்யப்பட்டது.
• புதினத்திலும் சரி நிஜத்திலும் சரி அதிகப்படியான உயிர்ச் சேதத்திற்கு காரணம் போதுமான அளவு துணைப்படகுகள் (Lifeboats) இல்லாதது தான். டைட்டன் கப்பலில் மொத்தமே இருபத்துநான்கு துணைப்படகுகளே இருந்தன. அதேபோல் டைட்டானிக்கில் மொத்தமே பதினாறு துணைப்படகுகள் இருந்தன.
• டைட்டன் வடக்கு அட்லான்டிக்கில் சுமார் மணிக்கு 25 knot வேகத்தில் பயணம் செய்து பனிப்பாறையில் மோதியது. newfounland-டிற்கு நானூறு மைல் தூரத்தில் விபத்து நடைபெற்றதாகப் புதினத்தில் கூறப்பட்டிருக்கும். அது போலவே நிஜ டைட்டானிக் கப்பல் வடக்கு அட்லான்டிக்கில் 221/5 knot வேகத்தில் பயணம் செய்து பனிப்பாறையில் மோதியது. newfounland-டிற்கு நானூறு மைல் தூரத்தில்தான் இந்த விபத்து நடந்திருக்கும்.
• நாவலில் கூறப்பட்டிருந்த டைட்டன் கப்பலில் இரண்டாயிரத்து ஐந்நூறு பயணிகள் உயிரிழந்ததாகவும் பதின்மூன்று பேர் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் கூறப்பட்டிருக்கும். டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாயிரத்து இருநூறு பயணிகளில் 1523 பேர் உயிரிழந்தனர். 705 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.



