• Mon. Oct 27th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

பச்சைகுத்துதல் எனும் பாரம்பரியம் டாட்டூ ஆன கதை..!

Byத.வளவன்

Jan 23, 2022

ஆதி மனித நாகரிகம் மீண்டும் அமலுக்கு வருகிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்திருக்கிறது நமது இளைஞர்களின் காதுகளில் தொங்கும் கம்மலும், கடுக்கனும். அடுத்ததாக உச்சியில் ஒரு குடுமி. இதையெல்லாம் விஞ்சும் வகையில் பச்சையாக பண்டைய நாகரீகத்தை பறைசாற்றுவது பச்சைகுத்துதல்.
ஆதி இன, குலக்குழுக்கள் தங்களை வேறுபடுத்திக் கொள்ளவும், காற்று கருப்புகளிலிருந்து தப்பிக்கவும் பயன்படுத்திய உத்திதான் பச்சைகுத்துதல்.
அடிமைகள், கைதிகளை அடையாளப்படுத்த அக்காலத்தில் பச்சை நிறம் கிரேக்க, ரோம தேசங்களில் பயன்பட்டது. ஹிட்லரின் நாஜி வதை முகாம்களில் யூதர்களுக்கு எண்கள் பச்சை குத்தப்பட்டது. இது ஒரு திராவிட நாகரீகம் என துணிந்து சொல்லலாம். திராவிட இன குழுவினரிடம் இருந்து மங்கோலியர்களுக்கும் அவர்கள் மூலம் உலகில் மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம். அதற்கேற்ப, இந்திய, இலங்கை தமிழ் மக்களிடம் பழங்காலத்திலிருந்தே பச்சைக் குத்தும் வழக்கம் இருந்துவருகிறது. பச்சைக்குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்கவழக்கம்.
அந்தக் காலத்து பெண்கள் கணவன் பெயரை சொல்ல மாட்டார்கள். அதற்கு பதிலாக கைகளில் கணவர் பெயரை பச்சை குத்தி வைத்துக்கொள்வார்கள். யாராவது கணவர் பெயரைக் கேட்டால் கையை காட்டுவார்கள். அந்த காலத்தில் வளையல், மாங்கல்யம், மருதாணி போல பச்சைக் குத்துதலும் ஒரு மங்களகரமான விஷயமாக கருதப்பட்டது. திருமணம் பேசி முடித்த பெண்ணுக்கு கணவர் பெயரை பச்சைக் குத்துவது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்பட்டது. அது திருமணச் சடங்குகளில் ஒன்றாகவும் கருதப்பட்டது. அப்படி நடைமுறையில் இருந்து வந்த வழக்கம் தான் இன்று டாட்டூவாக உருமாறி இருக்கிறது.
வட இந்தியாவில் பெண்கள் பச்சை குத்திக்கொள்வது பல இனக் குழுவினரிடையே இன்னமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான கிராமப்புறங்களில் ‘கோட்னா’ என்னும் பச்சை குத்தும் முறை இருந்தது. பச்சைகுத்திக் கொள்ளாவிட்டால் பெண் பவித்ரமற்றவள். புகுந்த வீட்டார் அவளது கையால் அன்ன, ஆகாரம் வாங்கி உண்ணமாட்டார்கள்.எனவே, மணமுடிக்கும் தருணத்திலாவது பச்சை குத்தியாகவேண்டும். குழந்தை திருமணம் நடைமுறையிலிருக்கும் பகுதிகளில் மணப்பெண்ணான சிறுமிக்கும் இந்த முத்திரை கல்யாணம் முடிந்த சில மாதங்களில் கட்டாயம் குத்தப்படும்.
அங்கு தோலின் மேல் பாகத்தை தீயில் சுட்டு, கருப்பு நிற மையை கூரிய ஊசி மூலம் உள்ளே செலுத்துவார்கள். காயம் ஆற ஒரு மாதமாவது ஆகும். கணவர், தந்தையின் பெயர்கள், கிராமங்களின் பெயர்கள், குல மரபுச் சின்னங்கள், தெய்வ உருவங்கள் பச்சை குத்தப்படும்.

சில சமூகங்களில் பச்சை குத்துதலில் ஆன்மீக ரகசியம் அடங்கியுள்ளது. இறந்த பின்பு ஆன்மா சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்லும்போது உடலில் உள்ள பச்சை மூலம் அவர்களின் மூதாதையர்களை அறியமுடியுமாம். விபத்தில் இறந்தவரையும் அவர் குத்திய பச்சை எளிதில் அடையாளம் காட்டிவிடுகிறது. தன்னை தனித்துவப்படுத்த பச்சைகுத்துதல் ஒருவருக்கு வசதியாக இருக்கிறது. உடலில் பச்சை குத்திக்கொள்வது சுதந்திரத்தின் வெளிப்பாடாகவும், எதிர்ப்பின் மறு ரூபமாகவும் கருதப்படுகிறது. தாங்கள் யார் என்பதை தனித்துவத்துடன் வெளிப்படுத்திக் காட்டுவதற்காக இளைஞர்கள் பலரும் பச்சை குத்திக்கொள்கிறார்கள்.
ஒருகாலத்தில் தனது கட்சித்தொண்டர்கள் அனைவரையும் பச்சை குத்துமாறு எம்ஜிஆர் கட்டளையிட்டதும், அண்ணா, எம்ஜிஆர் உருவங்களையும், கட்சி கொடியையும் எல்லோரும் பச்சை குத்திகொண்டனர். கூட்டத்தை பச்சை குத்துவோரால் சமாளிக்க முடியவில்லை. இரவு, பகல் காத்திருந்து குத்திக்கொண்டனர். பச்சை குத்துதல் ஒரு காலத்தில் அழகின் ஓர் அம்சமாகவும் இருந்தது. ஆனால், அத்தகைய பழஞ் சமூகத்தில் எல்லாம் மறைந்துவிட்ட இந்த பச்சை பழக்கம், நவீன நாகரிகத்தை பற்றிக்கொண்டது. இளைஞர்களின் பச்சை ஆர்வம் டாட்டூவை பெருந்தொழிலாக மாற்றிவிட்டது. முன்புபோல், கையில் ஊசி, மையுடன் யாரும் பச்சை குத்த அலையவில்லை. அதற்கான டாட்டூ பார்லர்கள் உள்ளன.
நவீன பச்சையான டாட்டூ பின் விளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சை. டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ் போன்ற புரியாத பெயருள்ள தோல் நோய்களோடு, கிருமித்தொற்றும் ஏற்பட வாய்ப்புள்ளது. பலவிதமான தோல் வியாதிகள் டாட்டூ மூலம் உருவாகும். எச்.ஐ.வி., ஹெபடைடிஸ்-பி போன்றவையும் ஏற்படலாம் என்பது மருத்துவர்களின் கணிப்பு. டாட்டூக்களை உடலில் பதிக்க சுத்திகரிக்கப்பட்ட ஊசியை யாரும் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊசிகளை பயன்படுத்தாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பயன்படுத்தப்படும் வண்ணமும் தரமாக இல்லை. வண்ணங்கள் என்ற பெயரில் நச்சு ரசாயனம் தோலுக்குள் செலுத்தப்படுகிறது. அது உள்ளே ஊடுருவி ஊறு செய்கிறது.
லாட்ஜ் மருத்துவர்கள் போல் பலப்பல டாட்டூ நிபுணர்கள் முளைத்துள்ளனர். அவர்களின் மருத்துவ, அனுபவ அறிவை அறிவது கடினம். டாட்டூ குத்துபவர்கள் கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். இதிலெல்லாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடலுக்கு அழகை விட ஆரோக்கியம் முக்கியம் என்ற உணர்வு எப்போதும் இருந்து கொண்டிருக்கவேண்டும்.
வெளிநாட்டில் டாட்டூ பார்லர்கள் நடத்த அரசு உரிமம் அவசியம். அமெரிக்க பார்லர்களில் பயன்படுத்தும் வண்ணங்களுக்கு ‘ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷன்’ அமைப்பின் நற்சான்று கட்டாயம். இங்கு அந்த ஏற்பாடு இல்லை. இதைவிட, நினைத்தால் காதல், மறுத்தால் மோதல் என்ற நிலையில், ஆயுள் குறைந்த காதலுக்காக பச்சை குத்திக்கொண்டு, அதை அழிக்கும் அவஸ்தையில் நீண்ட காலம் அல்லல்படுகின்றனர்.

‘லேசர் தெரபி‘ மூலம் டாட்டூ பதிவை அழிக்கும்போது வலியோடு நோய்த்தொற்றும் ஏற்படும். நமது மரபை பொறுத்தவரை பச்சை குத்துதல் ஒரு மருத்துவமே. பாதத்தில் நீர்க்கோவை வந்தால் அதில் ‘ நீர் பச்சை’ குத்துவது நமது மருத்துவ முறை. நமது பச்சை மற்றவை போலன்றி மூலிகை வண்ணமே. மஞ்சள், விளக்கெண்ணெய், கரியாந்தழைச்சாறு கலவையே அந்த வண்ணம். இவற்றுடன் தாய்ப்பால் அல்லது அகத்திச்சாறு கலந்து ஊசி, மூங்கில்குச்சி அல்லது எலுமிச்சை முள் கொண்டு வரைந்த படத்தின் மீது பச்சை குத்துகின்றனர். கரியாந்தழைச் சாற்றின் குரோமிய ஆக்சைடு தோலில் பரவி அழியாத நிறத்தை அளிக்கிறது. பச்சை குத்துவதால் ஏற்படும் பாதிப்பை நீக்க ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த தற்காலிகப் பச்சையை உருவாக்கியுள்ளனர்.