• Fri. May 3rd, 2024

வயதான பெற்றோரை துரத்தி விட்டு வீட்டைக் கொளுத்திய மகன்கள்..!

Byவிஷா

Dec 17, 2023

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்தி விட்டு, வீட்டைக் கொளுத்திய மகன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கட்டயங்காடு மதன்பட்ட ஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 75. இவரது மனைவி சகுந்தலா வயது 70. இவர்கள் இருவருக்கும் கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி என்ற இரு மகன்கள் மற்றும் சீதாலட்சுமி என்ற ஒரு மகள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆன நிலையில் வயதான பெற்றோர்களை இரண்டு மகன்களும் கவனிக்காமல் விட்டு விட்டு தனியாக சென்று குடித்தனம் நடத்தி வருகின்றனர். ஆதரவற்ற நிலையில் இருந்த இவர்களை மகள் சீதாலட்சுமி அவ்வப்போது சென்று அவர்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இரு மகன்கள் மற்றும் அந்தபகுதி முன்னாள் கவுன்சிலர் பானுமதியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டை உடைத்து வீட்டில் உள்ள பொருட்களை தீயிட்டு கொளுத்தி தங்களை அடித்து விரட்டி வீடு மற்றும் நிலத்தை அபகரிக்க முயல்வதாக இராமலிங்கம் மற்றும் சகுந்தலா இருவரும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். வீட்டை அடித்து சேதமாக்கி அதில் உள்ள பொருட்களை தீயிட்டு கொளுத்திய வீடியோ ஆதாரங்கள் மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் ஆகியவற்றை மருத்துவ சான்றிதழ் மூலம் காவல் நிலையத்தில் தெரிவித்தும் திருச்சிற்றம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா மற்றும் போலீசார் எந்த நடவடிக்கையும் சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கவில்லை என்று கூறினர் .
இது தொடர்பாக அவர்கள் உயர் அதிகாரிகள் இடத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில் நாங்கள் அவர்களுக்கு பயந்து போய் எங்களது மகள் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளோம் என வேதனை தெரிவிக்கின்றனர். தாங்கள் வயதான காலத்தில் உடல் ரீதியான பாதிப்போடு தற்போது மனரீதியான பாதிப்பும் ஏற்பட்டு தவிக்கிறோம். எங்களது உடமைக்கும் எங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே தமிழக முதல்வர் உடனடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையிலாது எங்களை அவர்களிடமிருந்து காப்பாற்றி எங்களது சொத்துக்களை பாதுகாத்து தர வேண்டுமென கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *