நேற்றைய தினம் ஜம்முகாஷ்மீர் பெஹல்காம் பகுதியில் உள்ள சுற்றுலாத்தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 வெளிநாட்டவர்கள் உள்பட 28 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் தெரிவித்திருப்பதாவது..,
“காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை. மூன்று பேர் மட்டும் காயம் அடைந்துள்ளனர். அதில், இரண்டு பேரின் உடல்நிலை சீராக உள்ளது. ஒருவர் மட்டும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் உள்ள தமிழக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுடன் பேசியுள்ளனர். தமிழ்நாடு அரசின் சிறப்பு அதிகாரிகள் இன்று மாலை காஷ்மீர் சென்று சேர்ந்தவுடன், உடனடியாக பணிகளை மேற்கொள்வார்கள்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெஹல்காம் தாக்குதலில் தமிழர்களின் நிலை : தலைமைச் செயலாளர் விளக்கம்
