நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பால், ஜெயிலர் படக்குழுவினர் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை தொடர்ந்து ரஜினியின் அடுத்த பட இயக்குனர்களின் பட்டியலில் பல இளம் இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஜினியின் ‘தலைவர் 169’ பட அப்டேட் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் தனது 169 ஆவது படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனருடன் ரஜினி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் வெளியாவதற்கு முன்பாகவே ரஜினியை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் நெல்சன். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘பீஸ்ட்’ படம் குறித்து பலவிதமான நெகட்டிவ் விமர்சனங்கள் இணையத்தில் குவித்தது. இதனால் ‘தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சன் கையை விட்டு நழுவலாம் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் பரபரப்பை கிளப்பியது.
இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு ‘ஜெயிலர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெறவிருந்தது. அதற்காக அங்கு பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அங்கு தெலுங்கு திரையுலகினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் ‘ஜெயிலர்’ படப்பிடிப்பு தள்ளி போகலாம் என்று கூறப்படுகிறது. தலைவர் படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பல சிக்கல்களில் சிக்கி வருவது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.