ரயில்களில் சார்ஜிங் வசதி
நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, செல்போன்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத சாதனமாக மாறியுள்ளன. நீண்ட தூர ரயில் பயணங்களின்போது பயணிகள் தங்களது செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வதற்காக ரயில் பெட்டிகளில் சார்ஜிங் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பயணிகள் தங்களது பயண நேரத்திலேயே மின்னணு சாதனங்களுக்குத் தேவையான மின்னேற்றத்தைச் செய்து வருகின்றனர். இருப்பினும், இந்தச் சார்ஜிங் வசதிகளைப் பயன்படுத்தும்போது ஏற்படும் மின்சாரக் கோளாறுகள் மற்றும் பேட்டரி வெடிப்பு போன்ற சம்பவங்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும்.

பவர் பேங்க் வெடித்ததால் பாதுகாப்பு நடவடிக்கை
தென்கிழக்கு ரயில்வேயில் இயங்கிக் கொண்டிருக்கும் மும்பை – ஹவுரா மெயில் (12809) கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி ஒடிசா மாநிலம் சக்ரதர்பூர் கோட்டம் பண்டமுண்டா பயணித்துக் கொண்டிருந்த போது, B-3 ஏசி பெட்டியில் பயணி ஒருவர், அதிகாலை சுமார் 3.38 மணியளவில், தனது பவர் பேங்க்கை சார்ஜிங் பாயிண்ட்டில் இணைத்துவிட்டு உறங்கியுள்ளார். அப்போது பவர் பேங்க் வெடித்ததில் தீப்பற்றியதுடன், பெட்டி முழுவதும் புகை பரவியுள்ளது. இதனால் தீ எச்சரிக்கை அலாரம் செயல்பட்டது.
இதையடுத்து ரயில் பண்டமுண்டா அருகே சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் ரயில்வே வணிகப் பிரிவு ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிகாலை 3.53 மணியளவில் ரயில் மீண்டும் புறப்பட்டது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் ரயில்களில் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பைத் துண்டிப்பது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
ரயில் பெட்டிகளுக்குள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது தீ பரவும் அபாயம் இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை
இதையடுத்து, ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, அனைத்து ரயில்களிலும் உள்ள செல்போன் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை துண்டிக்க வேண்டும். இந்த நடைமுறையை எவ்வித விதிவிலக்கும் இன்றி கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்ட்கள் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்வது ரயில்வே ஊழியர்களின் பொறுப்பாகும். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களையும் பயிற்சியையும் வழங்க வேண்டும் என்றும் ரயில்வே வாரியம் வலியுறுத்தியுள்ளது.
அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த உத்தரவு
ரயில்வே வாரியத்தின் உத்தரவு அனைத்து ரயில்களிலும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரயில்வே அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ரயில்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இரவு நேரத்தில் சார்ஜிங் பாயிண்ட்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு நடைமுறைகளில் அலட்சியம் ஏற்படாமல் இருக்கவும், பயணிகளின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உரிய கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மீண்டும் தீவிரம்
ரயில்களில் இரவு நேரத்தில் சார்ஜிங் வசதியை நிறுத்துவது தொடர்பான அறிவுறுத்தல் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் நடவடிக்கை மட்டுமல்ல. இதுதொடர்பாக ரயில்வே வாரியம் கடந்த 2014-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும், அந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படாதது அண்மையில் நிகழ்ந்த பவர் பேங்க் வெடிப்புச் சம்பவத்தின் மூலம் கவனத்துக்கு வந்துள்ளது. இதன் காரணமாகவே, பழைய உத்தரவை அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் தீவிரமாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு
ரயில்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சார்ஜிங் வசதி நிறுத்தப்படுவதால், இரவு நேரப் பயணங்களின்போது செல்போன் சார்ஜ் செய்ய வேண்டிய பயணிகள் சிரமத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
குறிப்பாக, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்களது பயணத்தைத் திட்டமிடும்போது செல்போனில் போதிய மின்னேற்றம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால், தீ விபத்துகள் மற்றும் பேட்டரி வெடிப்பு போன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வது அவசியமாகிறது.




