• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கிராமத்திலிருந்து மாதாவை வழிபட வருகை தந்த பொதுமக்களால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Jan 8, 2026

மதுரை மாவட்டம் துவரிமான் அருகே நாகமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது புல்லூத்து. இதன் அருகே 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாய்ஸ் டவுன் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மாணவர்களுக்கான புனித தெலசால் தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. உண்டு உறைவிட மையம் என்பதால் 35 மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர்.

பாய்ஸ் டவுன் அமைப்பின் 60ஆம் ஆண்டை முன்னிட்டு, அந்நிறுவனத்திற்கு செல்லும் பாதையில் அமைக்கப்பட்ட புதிய பீடத்தில் குழந்தை ஏசுவுடன் இருப்பது போன்ற வேளாங்கன்னி மாதாவின் ஃபைபர் சிலை ஒன்று அமைக்கப்பட்டு, இதற்கு மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை அந்தோணிசாமி சவரிமுத்துவால் புனித நீர் தெளிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

அக்குறிப்பிட்ட பீடத்தில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக பீடத்தின் அருகேயுள்ள காவலாளி அறைக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென இந்த மாதாவின் சிலையிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் வடியத் தொடங்கியது. இதுகுறித்து காவலாளி அளித்த தகவலின் அடிப்படையில் பாய்ஸ் டவுன் நிர்வாகத்திலுள்ள அருட்சகோதரர்கள் வந்து பார்வையிட்டனர்.

இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குநர் அருட்சகோதரர் இனிகோ அமலன் கூறுகையில், ‘தெலசால் அருட்ச்கோதரர்களால் கடந்த 60 ஆண்டுகளாக பாய்ஸ் டவுன் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. 60ஆம் ஆண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, இந்த மாதா சிலையை மதுரை உயர் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி திறந்து வைத்தார். அக்குறிப்பிட்ட மாதா சிலை அமையும் பீடத்தில் சில பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்த காரணத்தால், அன்று மாலையே அச்சிலையை தூக்கி வந்து இந்த அறையில் வைத்தேன். அப்போதிருந்து மாதா சிலை இங்குதான் உள்ளது.

இந்நிலையில், இந்த அறையில் தங்கும் காவலாளி நேற்று இரவு 11.30 மணியளவில் மாதா மற்றும் குழந்தை ஏசுவின் சிலையிலிருந்து நறுமணத்துடன் எண்ணெய் வெளி வருவதாக தகவல் தெரிவித்தார். இந்நிலையில், இந்த சிலையை உபயமாக அளித்த ஸ்டீபன் என்பவர் காலையில் பராமரிப்பு வேலைகளை மேற்ககொள்வதற்காக வந்தபோது, சிலையிலிருந்து அதிகமாக எண்ணெய் வழிவதைக் கண்டு எங்களிடம் தெரிவித்தார்.

பாய்ஸ் டவுனில் பணியாற்றும் அனைத்து அருட்சகோதரர்களும் உடனடியாக இங்கு வந்து பார்த்தோம். இந்நிலையில் தகவல் கேள்விப்பட்டு சுற்றியுள்ள புல்லுத்து, நிர்மலாபட்டி, கீழமாத்தூர் மற்றும் துவரிமான் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வந்து பகல் முழுவதும் மாதாவை வழிபட்டனர். வருகின்ற மக்கள் அனைவரும் அந்த எண்ணெய்யை சின்னஞ்சிறு பேழைகளில் எடுத்துச் சென்றனர்’ என்றார்.

கூட்டம் கூட்டமாக வந்த பொதுமக்கள் இரவு 9 மணி வரை மாதாவை வழிபட்டுச் சென்றனர். சிலையில் வழியும் எண்ணையை தொட்டு தங்கள் தலையிலும் நெற்றியிலும் இட்டுச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.