மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ‘தனிஷ்க் ஜுவல்லர்ஸ்’ நகைக்கடையில் கடந்த 12-ஆம் தேதி அதிகாலை, சுமார் 11 கிலோ 384 கிராம் எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இக்கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிப்பதற்காக, நிஷாந்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு, நிஷாந்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று அனுமதி அளித்தார்.

நடித்துக் காட்டிய நிஷாந்த் – பொருட்கள் பறிமுதல்:
நீதிமன்ற உத்தரவையடுத்து, நேற்று மாலை முதல் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் நிஷாந்திடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளைச் சம்பவத்திற்கு 3 இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து, கொள்ளையடித்த பிறகு தப்பிச் சென்ற சேலத்திற்கு நிஷாந்தை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அங்கு அவர் பயன்படுத்திய பைக்கைப் பறிமுதல் செய்தனர். பின்னர் மதுரைக்கு அழைத்து வரப்பட்டு, கொள்ளை நடந்த தனிஷ்க் நகைக்கடை, நிஷாந்தின் வீடு மற்றும் நகைகளைப் பதுக்கி வைத்திருந்த மாடக்குளம் வயல்வெளி ஆகிய பகுதிகளுக்கு நேரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, கொள்ளைச் சம்பவத்தை எவ்வாறு அரங்கேற்றினார் என்பதை நிஷாந்த் நடித்துக் காட்டினார்; அதனை காவல்துறையினர் சாட்சியங்களாகப் பதிவு செய்தனர். மேலும், கொள்ளைக்குப் பயன்படுத்திய ஸ்பிரேயர், முகமூடி மற்றும் நகைகளைப் புதைத்து வைக்கப் பயன்படுத்திய கடப்பாரைக் கம்பி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

டிசம்பர் 4 வரை நீதிமன்றக் காவல்:
ஒரு நாள் காவல் விசாரணை முடிவடைந்த நிலையில், நிஷாந்த் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு முன்பாக அவர் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, “விசாரணையின்போது காவல்துறையினர் துன்புறுத்தினார்களா? வேறு ஏதேனும் கூற வேண்டுமா?” என நீதிபதி கேட்டதற்கு, “எதுவும் இல்லை” என நிஷாந்த் பதிலளித்தார். இதனையடுத்து, நிஷாந்தை வரும் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிஷாந்த், காவல்துறை வாகனத்தில் சிரித்தபடியே ஏறிச் சென்றார்.
வழக்கறிஞர் பேட்டி:
இது குறித்து கைதான நிஷாந்தின் வழக்கறிஞர் பெரியராசு செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒரு நாள் காவலில் எடுத்து காவல்துறையினர் நிஷாந்திடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது நிஷாந்திற்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. வழக்கறிஞரான என்னைச் சந்திக்கவும் காவல்துறையினர் அனுமதி அளித்தனர்” எனத் தெரிவித்தார்.


