பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி,டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை வெளிநாடு பயணம் மேற்கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.நடப்பு ஆண்டில் பிரதமரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.குறிப்பாக,பிரதமரின் ஜெர்மனி பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய மற்றும் பொருளாதார விஷயங்களில் உறவுகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் ஸ்கோல்ஸ் ,இந்தியா-ஜெர்மனி இடையேயான அரசாங்க ஆலோசனைகளின் (ஐஜிசி) 6-வது பதிப்பிற்கு இணைத் தலைவராக இருப்பார்கள்.மேலும்,டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் அதிகாரப்பூர்வ பயணமாக பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்கு புறப்படுகிறார்.
பிரதமர் தனது டென்மார்க் பயணத்தில் அந்நாட்டில் உள்ள தொழில் அதிபர்களை சந்தித்த பிறகு டென்மார்க்கில் உள்ள இந்திய சமூகத்தினரை சந்தித்து பேசுவுள்ளார் என்று கூறப்படுகிறது.மேலும்,டென்மார்க் நடத்தும் 2 வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் பிரதமர் பங்கேற்கிறார்.
இறுதியாக,மே 4 ஆம் தேதி பிற்பகல் பிரதமர் இந்தியா திரும்பும் பயணத்தில்,பாரிஸில் சிறிது நேரம் செலவிட்டு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோனை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,இந்தியாவும் பிரான்சும் 75 ஆண்டுகால நட்பு உறவுகளைக் கொண்டாடுகின்றன.மேலும் இந்த மாத தொடக்கத்தில் சமீபத்தில் மீண்டும் பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இமானுவேல் மாக்ரோன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையேயான மூலோபாய கூட்டாண்மையை(Strategic Partnership) வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.