


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவடை துவங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 65 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன.

மேலும் ஊடுபயிராக பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் பச்சைபயிறு வகைகள் முற்றிலும் சேதம் அடைந்தன. இதற்கு மார்ச் மாதத்திற்குள் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மிகவும் சொற்ப அளவிலான இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்திற்கு முழுமையாக வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம், டெல்டா பாசனதாரர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை டிஎஸ்பி பாலாஜி தலைமையில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் விவசாயிகளிடமிருந்து முதலில் மைக்கை பிடுங்கினர்.

தொடர்ந்து விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களை கைது செய்தனர். கைது செய்வதற்கு விவசாயிகள் முன் வராத நிலையில் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினார் அப்பொழுது காவல்துறையினர் விவசாயிகளை தாக்கியதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் உடைகள் கிழிக்கப் பட்டதாகவும் கை கால்களில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட விவசாயிகளை வெளியே கொண்டு செல்லாத படி வாகனங்களை சுற்றி விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டெல்டாவை சேர்ந்தவர் என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர், காவல்துறையை ஏவி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

