• Fri. Apr 26th, 2024

காங்கிரஸின் பரிதாப நிலை…48 மணி நேரத்தில் ஆலோசனை கூட்டம்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. பஞ்சாப்பில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் , இம்முறை படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 16 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். அதிலும் காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் பாதிக்கு பாதி சரிந்துள்ளது. முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலுமே பின் தங்கி உள்ளார். இதே போன்று, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பின்னடைவை சந்தித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரை பிரியங்கா காந்தியே தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய நிலையில் காங்கிரஸ் கட்சியால் இரட்டை இலக்கங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை.

பஞ்சாப்பில் ஆட்சியை இழந்துள்ளதால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 2-ஆக குறைந்துள்ளது. ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சி புரிந்து வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில், ஆளுங்கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ் இடம் பிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், இந்த 5 மாநில தேர்தல்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி இதிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. கட்சியை மறுசீரமைப்பது குறித்து கட்சித்தலைமை சிந்திக்க வேண்டுமென காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கருத்து தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான பெரிய கட்சியான காங்கிரஸின் இந்த சரிவு மூத்த தலைவர்கள் மட்டுமன்றி தொண்டர்களையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
மேலும் சோனியா காந்தி தலைமை மீது அதிருப்தியில் இருந்த 23 தலைவர்களுடன் அடுத்த 48 மணி கூடி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த 23 தலைவர்களும் ஐந்து மாநில தேர்தல் வேலைகளிலிருந்து முழுமையாக விலகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *