சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த அஜித் குமார் வழக்கில், தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த வழக்கில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர் ஹென்றி தலைமையிலான குழுவினர், அஜித் குமாரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்த சந்திப்பின் போது, “அஜித் குமார் தம்பி மற்றும் உறவினர்களை இன்று தான் முதன்முறையாக சந்திக்கிறேன். பலரும் வந்து ஆதரவு தெரிவித்த நேரத்தில், நாங்கள் நீதிமன்றத்தில் இவர்களுக்காக வாதாடுவதற்காக அமைதியாகவும் உறுதியுடன் வந்துள்ளோம்,” என வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், “இந்த வழக்கில் வழக்கறிஞராக பணியாற்றும் திருப்புவனத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா மற்றும் அவருடன் இணைந்து செயல்படும் வழக்கறிஞர் கணேஷ்குமார் ஆகியோரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் கடந்த ஆண்டு பார் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்ட இளம் வழக்கறிஞர்கள். அவர்களின் ஊக்கமும், தைரியமும் தான் இக்குடும்பத்திற்கு நம்பிக்கையூட்டும் ஒளியாக அமைந்துள்ளது,” என்றும் கூறினார்.
இதே நேரத்தில், நீதிமன்றம் தற்காலிகமாக ஒரு முக்கியமான இன்டரிம்ஆர்டர் வழங்கியிருப்பதையும், வழக்கு நடைமுறை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “நீதியின் பாதை உடனடியாக முடிவடையக்கூடியது அல்ல; நீண்ட காலத்தை கொண்டிருக்கும் நிலையான தீர்வாக அமையவேண்டும். ஆகவே அனைவரும் பொறுமையுடன் இருக்க வேண்டும்,” என்றார்.
மக்கள் மற்றும் சமூக நலனில் ஆர்வம் கொண்ட அனைவரும், மதம், சாதி பேதமின்றி இந்த வழக்கில் சாட்சியளிக்க முன்வர வேண்டும் எனவும், நீதி கிடைக்கும் வரை அஜித் குமாரின் குடும்பத்துடன் தொடர்ந்து இருந்து ஆதரவு அளிப்போம் எனவும் வழக்கறிஞர் உறுதியளித்தார்.