• Fri. Mar 29th, 2024

தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறது

ByA.Tamilselvan

Aug 13, 2022

தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறையை ஒழித்துக்கட்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்
காவல்துறை பணியில் சேரும் போலீசாரை அதிகாரிகள் தங்களது வீடுகளில் வேலை செய்ய பயன்படுத்தி வரும் இந்த ஆர்டர்லி முறை தொடர்வது பற்றி சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆர்டர்லி முறையை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வகையில் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை டி.ஜி.பி. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கூடுதல் கமிஷனர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். போலீஸ் அதிகாரிகளான சங்கர், அபய்குமார், மகேஷ்குமார் அகர்வால், கந்தசாமி, ஷகில் அக்தர் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. இதன்படி, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல் உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக உள்ள அனைத்து போலீசாரையும் உடனடியாக திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில் பணிபுரியும் போலீசார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் இந்த நடவடிக்கையால் தமிழக காவல் துறையில் ஆர்டர்லி முறை முடிவுக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *