• Fri. Mar 29th, 2024

தக்க நேரத்தில் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்த செவிலி

Byகாயத்ரி

Dec 4, 2021

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு சிபிஆர் எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலி வனஜாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலி வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அப்போது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். இளைஞர் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் அதன் மீது வாகனம் மோதி கீழே விழுந்ததில் இளைஞர் பலத்த காயமடைந்தார்.


இதை பார்த்த செவிலி வனஜா காரை நிறுத்தி இளைஞரை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.


இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது. இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது.


உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அந்த இளைஞர் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த இளைஞர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த வசந்த் என்பது தெரியவந்தது.பின்னர் மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.இதனையடுத்து செவிலி வனஜாவுக்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *