உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் போதிலும், சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.
உக்ரைன் போரால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்க அதிபர் பைடன் தடை விதித்துள்ளார்.
உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச அரங்கில் ரஷ்யாவைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக ரஷ்யா மீது பலரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருப்பினும் சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய், இயற்கை வாயுக்களை இறக்குமதி செய்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலும் தங்கள் இயற்கை எரிவாயு தேவைக்கு ரஷ்யாவையே நம்பி உள்ள நிலையில், வரும் காலத்தில் இந்தப் பொருளாதாரத் தடைகள் எப்படி ரஷ்யாவைப் பாதிக்கும் என்பதைப் பொருத்து தான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையே சில இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேர் 100 டாலரை தாண்டி உள்ள நிலையில், இது இந்தியாவுக்குப் பெரிய உதவியாக அமையலாம் . ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்தால், அது அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறுவதாக அமைந்துவிடும் எனச் சிலர் கூறினார்.
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது பொருளாதாரத் தடைகள் மீறுவதாக அமையாது என்ற போதிலும் வரலாற்றில் உக்ரைன் போர் சமயத்தில் இந்தியா எந்தப் பக்கம் நின்றது என்பதை இது காட்டுவதாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்தியா தவிரப் பல நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்தே வருகிறது. இந்தப் பட்டியலில் முதன்மையானது சீனா.
ஐரோப்பிய யூனியனுக்குப் பிறகு ரஷ்யாவில் இருந்து அதிகம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் 2ஆவது நாடாகச் சீனா உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போருக்குப் பின்னர் கச்சா எண்ணெய் வர்த்தகம் அதிகரித்து உள்ளதா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. இருப்பினும், ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே இருக்கும் சரக்கு கப்பல் சேவைகள் அதிகரித்து உள்ளதையே புதிய சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன.
27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் தனது இயற்கை எரிவாயு தேவையில் 40 சதவீதமும் கச்சா எண்ணெய்யில் 27 சதவீதமும் ரஷ்யாவையே நம்பி இருக்கிறது. இருப்பினும், ரஷ்யா மீது எந்தளவுக்குக் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிளவு ஏற்பட்டுள்ளது. ஆனால் நீண்டகால நோக்கில் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதில் ரஷ்யாவிடம் இருந்து விலகி இருக்கவே ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகிறது. ரஷ்யாவின் சில முக்கிய நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் போதிலும், எண்ணெய் இறக்குமதி தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021இல் பிரான்ஸ் தனது கச்சா எண்ணெய் தேவையில் 9.5 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்தே இறக்குமதி செய்திருந்தது. ரஷ்யாவிடம் இருந்து வரும் காலத்தில் விலகி இருக்கத் தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல ஜெர்மனி தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 14% ரஷ்யாவிடம் இருந்தே வாங்குகிறது. ரஷ்யாவின் பல முன்னணி கச்சா எண்ணெய் நிறுவனங்களில் ஜெர்மனி முதலீடு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் நாடு தனது கச்சா எண்ணெய் தேவையில் 15% ரஷ்யாவிடம் இருந்தே பெறும் நிலையில், அதை மாற்றி சவுதியில் இருந்து கச்சா எண்ணெயை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நெதர்லாந்து ஏற்கனவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது. போலந்து ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யைப் பெறும் என்றாலும் எந்தச் சூழலையும் சமாளிக்கத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
மறுபுறம் ஹங்கேரி ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை எதிர்த்தே வருகிறது. என்ன நடந்தாலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது நிறுத்தப்படாது என உக்ரைன் அறிவித்துள்ளது. அதேபோல துருக்கியும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய நிறுத்த எவ்வித திட்டமும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. மேலும், மாஸ்கோ மீது தேவையற்ற பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது என்றும் தொடர்ந்து கூறி வருகிறது.