• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் காணாமல் போன கிணறு..,
கிராமமக்களால் மீட்டெடுக்கப்பட்ட பரபரப்பு…!

Byவிஷா

Aug 14, 2022

சேலத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு காலப்போக்கில் மண்ணுக்குள் புதைந்து போன கிணற்றை கிராமமக்களே ஒன்றிணைந்து மீட்டுள்ள சம்பவம் அக்கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஐயா என் கிணத்த காணோம், வட்டக் கிணறுய்யா, வற்றாத கிணறு” என்று ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி காட்சியை அனைவருமே பார்த்திருப்போம். அதை விசாரிக்க சென்ற காவல்துறை அதிகாரியே வேலையை விட்டு சென்றுவிடுவார்.
அந்த வகையில் சேலத்தில் காணாமல் போன கிணற்றை தேடி கிராம மக்கள் செய்துள்ள காரியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ராமிரெட்டிபட்டி கிராமம். இங்குள்ள மந்தை தோப்பூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு ஒன்று வெட்டப்பட்டது. இதனை அரசே செய்து தந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுக் கிணறு ராமிரெட்டிபட்டி கிராம மக்களின் தேவையை பூர்த்தி செய்து வந்தது. ஆனால் காலப்போக்கில் கிணற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்படியே கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கிணறு ஆக்கிரமிப்புகளால் மூடி மறைக்கப்பட்டது. இதனையறிந்து அப்பகுதி மக்கள் கிணற்றை மீட்கும் போராட்டத்தில் இறங்கினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் மனுக்களை அளித்தனர். பலமுறை மனுக்கள் கொடுத்து கிணற்றை மீட்க போராடினர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கிணறு தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரின் பெயரில் இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் அரசுக்கு சொந்தமான இடத்தில் தான் கிணறு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதேபகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை முடுக்கி விட்ட போது, சிலர் தனியார் முன்வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே தாரமங்கலம் – ஜலகண்டாபுரம் சாலையில் அமர்ந்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் போன கிணற்றை மீட்க வேண்டும். கிராமத்திற்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுபற்றி தகவலறிந்து தாரமங்கலம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன், துணை ஆய்வாளர் காமராஜ், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியராஜ், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அளித்த உத்தரவாதத்தின் பேரில் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. பின்னர் பொதுக்கிணறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டும் பணிகள் நடைபெற்றன.
அதில் வட்டக் கிணறு ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள், ஆக்கிரமிப்பாளர்கள் ஆகியோரை அழைத்து சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்கிடையில் கிணற்றை கண்டுபிடித்து தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அனுராதா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ராமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த 40 பேர் மீது தாரமங்கலம் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காணாமல் போன கிணறு மீட்கப்பட்ட சம்பவம் தாரமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.