
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் பைபர் நூலிலை தொடர்பான கருத்தரங்கில் மத்திய ஜவுளி தொழில்துறை இணை அமைச்சர் பபித்ரா மர்க்ஹெரிட்டா கலந்து கொண்டார். இந்நிலையில் கொரொனா காலத்தில் தமிழகத்தில் மூடப்பட்ட தேசிய பஞ்சாலை கழத்திற்கு சொந்தமான 7 பஞ்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டப்போவதாக மத்திய தொழிற் சங்கத்தினர் தெரிவித்தனர்.

ரேஸ்கோர்ஸ் பகுதியில் CITU,AITUC,HMS,LPF உட்பட 8 மத்திய தொழிற்சங்கத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இதனையடுத்து அப்பகிதியில் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட வந்த தொழிற்சங்கத்தினர் பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், அவர்களை
மத்திய இணை அமைச்சரிடம் அழைத்து சென்றனர்.
நட்சத்திர விடுதியில் மத்திய இணை அமைச்சர் பபித்ரா மர்க்கெரிட்டாவை நேரில் சந்தித்து தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
மத்திய இணை அமைச்சரிடம் தமிழகத்தில் மூடப்பட்ட தேசிய பஞ்சாலைகளை உடனடியாக திறக்க வேண்டும், அதுவரை தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். அரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மத்திய இணை அமைச்சர் பபித்ரா, தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை மூத்த அமைச்சர்களுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் கோரிக்கைகளை முழுமையாக கேட்டு இருப்பதாகவும், மத்திய இணை அமைச்சரின் வாக்குறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஹோட்டலில் இருந்து வெளியே வந்த மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
NTC தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் எனவும்,
தொழிலாளர்களுக்கு சம்பளம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர், இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கான வழிவகைகளை செய்வோம் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது என தெரிவித்த அவர்,
திருப்பூர் மாவட்டம் ஜவுளித்துறைக்கான ஒளிமயமான எதிர்காலத்தை கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
