மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு நோக்கி அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அதில் நடத்துனாராக பணியில் இருந்த புதுக்கோட்டை விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பயணிகளிடம் டிக்கெட் வாங்கிகொண்டிருந்துள்ளார்.

அப்போது மதுரை ஒத்தக்கடை பகுதியில் திருச்சி சாலையில் பேருந்து வேகமாக சென்றுகொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு இருந்ததால் ப்ரேக் அடித்தபோது பேருந்தின் கதவு மூடாமல் இருந்ததால் திடிரென பேருந்தில் இருந்து படிக்கட்டு வழியாக நடத்துனர் கருப்பையா சாலையில் தவறி விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டுநர் கருப்பையாவை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் தொடர்பு கொண்ட போது இருபது நிமிடத்திற்கு மேலாக தாமதப்படுத்தியதால் உடனடியாக அருகில் இருந்த ஆட்டோ மூலமாக நடத்துனர் கருப்பையாவை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர்.
அப்போது மருத்துவர்கள் அவர்கள் கருப்பையாவின் உடலை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரது உடலானது உடற்கூ்ராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அரசு பேருந்தின் கதவுகள் முறையாக மூடப்படாத நிலையில் சாலை நடுவே இருந்த தடுப்பு காரணமாக பிரேக் அடித்தது கீழே விழுந்து நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் கீழே தலையில் அடிபட்டு விழுந்த நிலையில் ஆம்புலன்ஸ் சேவை தாமதமானதாலும் உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளை தானியங்கி கதவு மூலமாக மூடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாத சூழலில் முறையாக கண்காணிக்காத நிலையிலும் இது போன்ற விபத்துகளில் பயணிகளை தொடர்ந்து தற்போது போக்குவரத்து பணியாளர்களும் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்று வருவது அரசின் அலட்சியத்தை காட்டுகிறது.
ஒத்தக்கடை பகுதியில் சாலைகளில் வேகத்தடை மற்றும் போதிய மின்விளக்குகள் அமைக்கப்படாத நிலையில் தொடர்ந்து விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் பலமுறை அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்