• Fri. Apr 26th, 2024

மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குல வரலாறு..!

Byவிஷா

Aug 25, 2022

தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. ஆயிரம் புயல் மழையினைத் தாண்டி இன்றும் உயிர்ப்புடன் தன் வரலாற்றை கம்பீரமாகத் தாங்கி நிற்கிறது மதுரை. குறிப்பிடத்தக்க ஆயிரம் வரலாறு மதுரை குறித்து உண்டு. அவ்வகையில் மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குளம் குறித்து பார்க்கலாம்.
மதுரை வண்டியூர் தெப்பக்குளம் ஆயிரத்து அறுநூறுகளில் மதுரையை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கரால் வெட்டப்பட்டது. கட்டிடக்கலை மீது ஆர்வம் கொண்ட நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டது மதுரை வரலாற்றின் பொற்காலம் என்றே சொல்லலாம். நாயக்க மன்னர்களில் மிகவும் திறமையானவராக இருந்தவர் மன்னர் திருமலை நாயக்கர். இவர் வெட்டிய இந்த தெப்பக்குளம் குறித்து மதுரை மக்களிடையே பல்வேறு கதைகள் புழக்கத்தில் உள்ளன.
அதில் ஒன்று மன்னர் தன் அரண்மனையினைக்கட்ட மண் எடுத்த இடமே பிறகு தெப்பக்குளமானது என்பதே., ஆனால் அது உண்மையல்ல என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். 1865ம் ஆண்டு மதுரைக்கு அழகு சேர்க்க பிரத்யேகமாக கவனத்துடன் வெட்டப்பட்டதே வண்டியூர் தெப்பக்குளம். 1000 அடி நீளமும் 950 அடி அகலமும் கொண்டு சதுரமாக அமைக்கப்பட்டது இந்த தெப்பக்குளம். இதன் ஆழம் 29 அடியாகவும் நீர்க் கொள்ளளவு 115 கனஅடியாகவும் உள்ளது.
இந்த தெப்பக்குளத்தின் நடுவில் ஒரு மைய மண்டபம் உருவாக்கப்பட்டது. வெளியே பல்லவ கட்டிடக்கலை பாணியிலும் உள்மண்டபம் முகலாய கட்டிடக்கலை பாணியிலும் உருவாக்கப்பட்ட இந்த மைய மண்டப விமானத்தின் நிழல் நீரில் விழாது என்பது அதன் கட்டிடக்கலைக்கு இன்னுமொரு சான்று. இந்த தெப்பக்குளத்தில் நீர் நிரப்ப அருகிலிருக்கும் வைகை ஆற்றிலிருந்து இக்குளத்திற்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. பக்கத்திற்கு மூன்றாக 12 படித்துறைகளைக் கொண்டது வண்டியூர் தெப்பக்குளம்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் தெப்பத்திருவிழா கொண்டாடப்படுகிறது. சிறப்பாக தெப்பக்குளத்தை வடிவமைத்த திருப்தி மன்னர் திருமலை நாயக்கருக்கு வரவே அவர் தனது பிறந்தநாளான தைப்பூச நாளில் இந்த தெப்பக்குளத்தை திறந்தார். மேலும் அந்நாளில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை தெப்பக்குளத்தில் எழுந்தருளச் செய்து மகிழ்ந்தார். இன்றும் தைப்பூச நாளில் மன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாளும் தெப்பத் திருவிழாவும் மதுரை மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *