• Fri. Apr 19th, 2024

கண்மாய்களில் நீர் நிரப்பக் கோரி ஆண்டிபட்டி விவசாயிகள் பேரணி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் முல்லை பெரியாற்று தண்ணீரை நிரப்பக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பேரணி நடைபெற்றது.

   ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் .90 சதவிகிதம் பேர் விவசாயிகளாகவும் ,விவசாயக் கூலிகளாகவும் ,கால்நடை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள கண்மாய் ,குளம் ,ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயம் கேள்விக்குறியாகி விவசாயிகள் துன்பப்பட்டு வருகின்றனர். மிக அருகாமையில் வைகை அணை இருந்தும், இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை அணை நிரம்பியும் ,நான்கு கிலோமீட்டர் தூரமே உள்ள ஆண்டிபட்டி பகுதிக்கு வைகை அணையால் எந்த விதமான பலனும் இல்லாமல் உள்ளது.

  எனவே முல்லை பெரியாற்றிலிருந்து குழாய்கள் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்து அனைத்து கண்மாய்களிலும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக இங்கு உள்ள விவசாய சங்கங்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு அரசும் இதற்கு செவி சாய்க்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மகாராஜன் இது சம்பந்தமாக சட்டசபையில் கோரிக்கையும் வைத்தார். ஆனால் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஆண்டிபட்டி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் முன்பு , கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் தலைமையில் ,செயலாளர் தயாளன், பொருளாளர் ரகுநாதன் ஆகியோர் முன்னிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி தொடங்கியது. இந்த பேரணியை போடி தாசம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார் .ஊர்வலம் ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து சட்டமன்ற அலுவலக கட்டிடத்திற்கு வந்தது. அங்கிருந்த சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனிடம் விவசாயிகள் சங்கங்களின் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து இத்திட்டம் நிறைவேறுவதற்காக குரல் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். இதனையடுத்து பேரணி நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *