• Thu. Apr 25th, 2024

தோட்ட வேலை பார்த்தவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

Byகிஷோர்

Nov 15, 2021

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டியில் தோட்ட வேலை பார்த்து வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மகேந்திரன் (28) என்பவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. 3 மணி நேர தேடுதலுக்குப் பின் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.

தஞ்சாவூர் அருகில் உள்ள சேர்வா விடுதி பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியன் மகன் மகேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் சாத்தூர் அருகிலுள்ள சல்வார்பட்டி கிராமத்தில் கந்த கோனார் என்பவரது தோட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயக் கூலியாக பணிபுரிந்து வந்துள்ளார். மகேந்திரன் மனைவி மற்றும் தனது 2 குழந்தைகளுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மகேந்திரன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு மோட்டார் கிணற்றுக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார்.

இந்த நிலையில் கிணற்றில் விழுந்த மகேந்திரனை மீட்க தோட்ட உரிமையாளர் மற்றும் கிராமத்தினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளனர். முடியாததால் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த மகேந்திரனை சுமார் 3 மணி நேரமாக தேடியுள்ளனர். இறுதியாக மகேந்திரனை சடலமாக மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *